செய்திகள்

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட சில தரப்பினருக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனையை நிறைவு செய்த எழுவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் குறித்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவு அறிவிப்பை ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனுக்கள் உயர்நீதிமன்ற எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டு நிறைவு செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இந்த குழாமின் தலைமை நீதிபதியாக செயற்படுகிறார்.

புவனெக அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பீ.தெஹிதெனிய மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குறித்த நீதிபதிகள் குழாமின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரண்டு பிள்ளைகளை இழந்த வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த நந்தன சிறிமான்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download