செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களை சுய கௌரவத்துடன் வாழவைப்பதே நோக்கம் -ஜுவன் தொண்டமான்

டி சந்ரு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப்
பெற்றுக்கொடுப்பதற்கு அப்பால், அம்மக்களைச் சுயகௌரவத்துடன் வாழ வைப்பதே,
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நோக்கம் என்று தெரிவித்த இதொகாவின் பொதுச்
செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான், யாருக்கும்
பயந்து வாழும் சூழ்நிலை எம்மக்களுக்கு இனி வராது எனவும் அனைவரும்
ஒன்றுசேர்ந்தால், நம்மை அசைக்கவோ அல்லது சீண்டிப் பார்க்கவோ யாராலும் முடியாது
எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய தனி வீட்டுத் திட்டத்துக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு, காலி – வலஹன்தூவ தோட்டத்தில், இடம்பெற்றது. 50 தனி
வீடுகளை நிர்மாணிக்கும் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய இராஜாங்க அமைச்சர், நுவரெலியா மாவட்டத்துக்கு
அப்பால் காணப்படும் வெளி மாவட்ட மலையகப் பெருந்தோட்டப் பகுதிகள் பல,
அபிவிருத்தியில் ஒதுங்கியே உள்ளன. இதற்கு, வெளிமாவட்ட மக்களுக்கிடையிலான
தொடர்புகள் விடுபட்டுள்ளமையே காரணமாகும்” என்றார்.

“சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் இருந்த தோட்டத் தலைவர்கள், தலைவிகள்,
இன்றும் இத்தோட்டத்தில் உள்ளனர். அன்றைய கால தொடர்புகள், காலம்போக
மாறிவிட்டது. ஆகையால், மக்கள் இன்று பயந்து வாழும் சூழ்நிலைக்கு வந்துள்ளனர்.

“இன்றைய நிலையில், நாம் யாருக்கும் பயந்து வாழும் அவசியம் இல்லை. ஒற்றுமையாக
இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும்” எனத்
தெரிவித்தார்.

“உங்களில் சிலர் பேசிய விடயம், எனது அதிகாரிகள் ஊடாக எனது காதுக்கு எட்டியது.
“ இவருடைய மாவட்டம் நுவரெலியா. இவர் ஏன் இங்கு அபிவிருத்தி செய்ய வேண்டும்”
என்று நீங்கள் தெரிவித்ததாகக் கூறியிருந்தீர்கள். மறுபுறத்தில், நுவரெலியா
மாவட்டத்தில் தமிழர்களுக்குச் செய்யும் அபிவிருத்தி, வெளி மாவட்ட மலையகத்
தமிழ் மக்களுக்கும் செய்யலாம் தானே என்றும் பேசுகின்றனர்.

“குறை சொல்ல நிறைய பேர் இருப்பார்கள். கடைசியில், நாம் இந்தப் பதவிக்கு
வந்துள்ளமை உங்களுக்குச் சேவை செய்யவே. இச்சேவையை, நாம் உங்களுக்கு
உண்மையாகச் செய்யமுடியும் என்பதை மறந்துவிடக் கூடாது” என, நம்பிக்கை
தெரிவித்தார்.

“இன்று, மலையக மக்களின் நாள் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தீர்வு
கிட்டியுள்ளது. ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு, கம்பனிகளுக்கு கஸ்டம் என்று
சொன்னார்கள். ஆனால் இப்போது, ஆயிரத்தைத் தந்துதான் ஆகவேண்டும் எனச்
சொல்லியுள்ளனர். இத்தொகையை வழங்கச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை,
வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், சம்பளம் வழங்கியாக வேண்டும்.
நாம் என்ன செய்தாலும், கடைசியில் குறைகூறும் ஒரு கூட்டம் இருக்கத்தான்
செய்கிறது” எனத் தெரிவித்த ஜீவன், ஆயிரம் ரூபாய் சம்பளம் தொழிலாளர்களின் கரம்
கிடைத்ததும், இன்றுள்ள விலைவாசிக்கு ஆயிரம் போதுமா என்றும் குறை
கூறுவார்கள்” என்றார்.

“காலி மாவட்டத்தில், 21 ஆயிரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் 6 ஆயிரம் பேர், இந்திய வம்சாவளிக் குடும்பத்தினர். நாம் இந்த
மாவட்டத்துக்கு, 500 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளோம். அதேநேரத்தில்,
கடந்த 200 வருடங்களாக, மலையக மண்ணில் உழைத்த எம் மக்களில் அதிகமானோர், காணி
உரிமையின்றி வாழ்கின்றனர். அவர்களுக்குக் காணி உரிமை அவசியம். முதலில் இதை
இவர்களுக்குப் பெற்றுத்தந்தாக வேண்டும் .

“இன்று, தோட்ட லயன் குடியிருப்பில் வாழும் ஒருவர், சுயமாகத் தனது பணத்தில்
மலசலகூடம் ஒன்றை அமைத்தால், அதைப் பொலிஸாரைக் கொண்டு இடிக்கின்றனர். இதற்கு,
அந்தக் காணி அவரின் உரிமையில்லை என்றே கூறப்படுகின்றது. இவ்வாண்டு ஏப்ரலில்,
1,400 காணி உறுதிப் பத்திரங்கள், மலையக மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
அடுத்தவர்கள் உதவி செய்துதான் வீடொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. நாம்
சுயமாகச் சம்பாதித்து அமைத்துக் கொள்ளவும் முடியும். ஆனால், வீடு அமைக்க
இடங்கொடுக்க மறுக்கிறார்கள். வெள்ளையர்கள் சென்றுவிட்டாலும், கம்பனிக்காரர்கள்
வந்துவிட்டார்கள்.

“தவறுகள் திருத்தப்பட்டு, இதொகாவிலிருந்து விடுப்பட்ட தொழிலாளர் உறவுகளை
இணைத்து, இ.தொ.காவை கட்டியெழுப்பி வருகின்றோம். அனைவரும் ஒன்றுசேர்ந்தால்,
நம்மை அசைக்கவோ அல்லது சீண்டிப் பார்க்கவோ யாராலும் முடியாது” என, ஜீவன்
தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com