செய்திகள்மலையகம்

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது விசேட சட்டம் மூலம் சட்ட அந்தஸ்து உள்ளதாக அமைதல் வேண்டும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது விசேட சட்டம் மூலம் சட்ட அந்தஸ்து உள்ளதாக அமைதல் வேண்டும்.

சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அ. சர்வேஸ்வரன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான விசேட சட்டம் மூலம் சட்ட அந்தஸ்து உள்ளதாக அமைதல் வேண்டுமென கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்;வரன் கருத்துத் தெரிவித்துள்ளர்ர். அவர் மேலும் தனது கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமது உழைப்பினால் பங்களிப்புச் செய்து வருபவர்கள். மிகக் கஷ்டமான வேலை நியதிகள் மற்றும் நிபந்தனைகளில்; மாதச் சம்பளமின்றி வேலை செய்து வருபவர்கள். இவர்களுக்கு வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது அவசியமானதும் மகிழ்ச்சியானதும் ஆகும். ஆனால், எழுகின்ற வினாவானது இந்தச் சம்பள அதிகரிப்பானது எவ்வாறு சட்ட அந்தஸ்து உள்ள ஒன்றாக வழங்கப்படப் போகின்றது என்பதாகும்.

இலங்கையில், தனியார் துறையிலுள்ள வேலையாட்களின் சம்பளத்தைத் தீர்மானிப்பதும் வழங்குவதும் தொடர்பில் பல வழிமுறைகள் உள்ளன. தொழில்தருநர் தொழில் ஒப்பந்தம் மூலமாக வழங்குவது, குறிப்பிட்ட தொழில்துறைக்கான சம்பள சபையானது அத் துறையிலுள்ள வேலையாட்களின் ஆகக் குறைந்த சம்பளத்தைத் தீர்மானிப்பதன் மூலம் வழங்குவது, தொழில்தருநருக்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையே செய்யப்படுகின்ற கூட்டு உடன்படிக்கை மூலம் வழங்குவது, நாட்டிலுள்ள வேலையாட்களுக்கான ஆகக் குறைந்த சம்பளம் தொடர்பாக ஆக்கப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் வழங்குவது, குறிப்பிட்ட துறைக்கென ஆக்கப்பட்டுள்ள ஒரு விசேட சட்டம் மூலம் வழங்குவது அல்லது அரசாங்கம் ஒரு விசேட நிதியத்தை ஆக்கி அதன் மூலம் பகுதியளவு பங்களிப்பைச் செய்வது போன்றவை சம்பளம் வழங்குவதற்கான வழிமுறைகளாக உள்ளன.

இவைகளில் பெருந்தோட்ட துறை வேலையாட்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சாதகமானதாக உள்ளது விசேட சட்டம் மூலம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகும். 2016 ஆம் ஆண்டில் ஆக்கப்பட்ட வேலையாட்களின் தேசிய ஆகக் குறைந்த சம்பளம் பற்றிய சட்டத்திற்கு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமானதா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில், இச் சட்டத்திற்கான திருத்தத்தின் மூலம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினால் அது இலங்கையிலுள்ள எல்லா வேலையாட்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகிவிடும். இலகுவான வேலை நிபந்தனைகளில், வேலைச் செறிவற்ற மற்றும் பொருளாதாரப் பயன்குறைந்த வேலை செய்கின்ற ஏனைய துறைகளைச் சேர்ந்த வேலையாட்களுக்கு இச் சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றதாகலாம்.

பெருந்தோட்டத்துறை வேலையாட்களின் கடினமான வேலை நியதிகள் மற்றும் நிபந்தனைகள், வேலைச் செறிவு, மாதச் சம்பளமின்மை மற்றும் நாட்டிற்கான பொருளாதாரப் பங்களிப்பு என்பவைகளின் அடிப்படையில் பெருந்தோட்டத்துறையை வேறுபட்ட விசேட துறையாக நியாயப்படுத்துவது பெருந்தோட்டத்துறை வேலையாட்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்துவதற்கு அடிப்படையான ஒன்றாகும்.

இந்த அடிப்படையில் பெருந்தோட்ட துறைக்கு விசேடமாக ஏற்புடையதான ஒரு சட்டத்தின் மூலம் அல்லது சட்டத் திருத்தத்தின் மூலம் இச் சம்பள அதிகரிப்பை வழங்குவதல் வேண்டும். 1927 இல் ஆகக் குறைந்த சம்பளங்கள் (இந்திய தொழிலாளர்) கட்டளைச் சட்டம் என்பது ஆக்கப்பட்டது. ஆனால், இச் சட்டத்திலுள்ள பல ஏற்பாடுகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமற்றவை. ஆகவே, இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமான விசேட சட்டம் மூலம் அல்லது சட்டத் திருத்தத்தின் மூலம் இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெருந்தோட்டத்துறை வேலையாட்களுக்கு வழங்குவதல் வேண்டும். அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள பெருந்தோட்டத்துறை வேலையாட்களிற்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது எந்த வழிமுறையில் வழங்கப்படப் போகின்றது என்பது இன்று முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளது.

நன்றி தினக்குரல்

Related Articles

Back to top button