செய்திகள்

பொதுமக்களின் பங்குப்பற்றலின்றி மடுமாதா திருவிழா : திகதி அறிவிக்கப்பட்டது.!

வரலாற்று சிறப்புமிக்க மடுத் திருப்பதியில் மடுமாதா திருவிழா, மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் ஜூலை மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பெருமளவிலான பொதுமக்களின் பங்குப்பற்றலின்றி இம்முறை உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மடு திருப்பதி புனித மரியாளின் பெயரில் இலங்கையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஒரு திருத்தலமாகும். அந்த வகையில் மரியன்னை விண்ணேற்றமடைந்த திருநாளில் பிரதி வருடமும் இத்திருவிழாகொண்டாடப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு என்ற புனித இடத்தில் சுமார் 400 வருட பழமை கொண்ட மடு அன்னை திருத்தலம் அமைந்துள்ளது.

போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் 1544ஆம் ஆண்டில் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் தற்போதைய மடுத் திருத்தலப் பகுதியில் ஒரு சிறிய அன்னை மரியாள் உருவத்தை வைத்து வணங்கினர். மேலும், 1583ஆம் ஆண்டில் மேலும் சில கிறிஸ்தவர்கள் ஒரு சிறிய ஆலயத்தை இவ்விடத்துக்கு அருகில் கட்டினர். மண்தாய் (Mantai) என்று அழைக்கப்பட்ட இதுவே மடு அன்னை மரியாவின் முதல் வீடாக இருந்தது. 1656 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் சிலோனில் (இலங்கை) காலனி ஆதிக்கத்தைத் தொடங்கிய போது கத்தோலிக்கரை துன்புறுத்தியதாக வரலாறு கூறுகிறது. அப்போது புகலிடம் தேடிய 30 கத்தோலிக்க குடும்பங்கள் தங்களுடன் மடு அன்னையின் திருவுருவத்தை எடுத்துச் சென்று 1670ஆம் ஆண்டில் மருதமடு என்ற இடத்தில் அதனை வைத்தனர். அந்த இடத்தில் தான் தற்போதைய மடு அன்னை திருத்தலம் உள்ளது. இது, இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com