செய்திகள்

பொலன்நறுவை- வெலிகந்தை முத்துக்கல்- அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில் 

கற்பின் வலிமையினை உலகறிய காற் சிலம்பால் நீதி கேட்டவளே
சோழவள நாட்டிலே பிறந்து பாண்டிய நன்நாட்டிலே பெருமை பெற்று 
சேரத் தமிழ் நாட்டிலே தெய்வமாய் நின்றவளே
தாயே கண்ணகி அம்மா உன் திருவடி பணிகின்றோம் நாங்கள் 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற திருவாக்கை மெய்ப்பித்தவளே
உன் குலத்தோர் நாங்கள் உய்திபெற வழிதருவாய்
தொழுது நிற்கும் எம்மைப் பார்த்தருள்வாய், அணைத்தருள்வாய்
தாயே கண்ணகி அம்மா உன் திருவடி பணிகின்றோம் நாங்கள் 
மனுக்குலத்தில் வந்துதித்து வானவரும் போற்றும் பேறு பெற்றவளே
பத்தினி அம்மனாகப் பார்போற்ற நின்றருளும் தாயே
வடமத்திய மாகாணத்தின் வெலிகந்தை பிரதேச முத்துக்கல்லிலே இருந்தருளும் கோவலன் மணமகளே
உன் திருவருளால் அகிலமே அமைதியுற வேண்டும் தாயே கண்ணகி அம்மா உன் திருவடி பணிகின்றோம் நாங்கள் 
பொலன்நறுவை மாவட்டந்தனிலே கோயில் கொண்டவளே
அதர்மம் அழிந்தொழிந்து தர்மம் நிலைத்து நிற்க வலிமை தந்து
வாட்டி நிற்கும் துன்பம் துடைத்தெறிந்து
வளம் பொங்கும் வாழ்வுக்கு வழியமைக்க வந்து துணையிருப்பாய் தாயே கண்ணகி அம்மா உன் திருவடி பணிகின்றோம் நாங்கள் 
ஒருபுறம் வயல்வெளியும் மறுபுறம் குடியிருப்பும் கொண்டவளே
வளம் மிக்க தமிழ் நிலத்தில் எழுந்தருளி காப்பளிப்பவளே
சோழத்தமிழ் அரசர் ஆண்ட பெருநிலத்தில் வீற்றிருந்து அருள் பொழியும் 
தாயே கண்ணகி அம்மா உன் திருவடி பணிகின்றோம் நாங்கள் 
ஆணவம் கொண்டோர் அடிசாய்ந்து போயிடவும்
வேதனை தருவோர் வேரறுந்து போயிடவும் அன்று ஆற்றலை வெளிப்படுத்தி அறம் நிறுவிய பேரருளே
இன்றுமுன் வரவு உலகிற்குத் தேவையம்மா
உடன் தோன்றி உலகினையே காத்திடுவாய், கருணை செய்வாய் தாயே கண்ணகி அம்மா உன் திருவடி பணிகின்றோம் நாங்கள்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen