செய்திகள்

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 436 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 436 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் பெருமளவானோர் கைது செய்யப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்று கைது செய்யப்பட்டோரில் 101 பேர், கொழும்பு புறக்கோட்டை, மற்றும் டேம் வீதிகளில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 5 ஆயிரத்து 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய வகையில் பின்பற்றுவது அவசியம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு தனிமைப்படுத்தல் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சிவில் உடைகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுவதுடன் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button