...
செய்திகள்

போராட்டம் முன் செல்கிறது-முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்க செயலாளர்.

கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு எதிரான போராட்டங்கள் இடைவிடாது உறுதியோடு முன்னகர்ந்து கொண்டிருக்கின்றன. 
அந்த வகையில் பல்வேறு தந்திரோபாயங்களை இந்த நூறு நாட்களிலும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினுடைய வழிகாட்டலின் கீழ் ஆசிரிய, அதிபர்கள் முன்னெடுத்துள்ளனர். சாதாரண கோரிக்கையாக தொடங்கப்பட்ட இந்த போராட்டம் அரசாங்கத்தினுடைய அசமந்தப் போக்காலும் தீர்க்கதரிசன மற்ற முடிவுகளாலும்  இன்று மிகவும் இறுக்கமான ஒரு நிலைக்கு வந்தடைந்துள்ளது.  
அரசாங்கத்தின் உயர்பீடத்தவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற  உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள்,  அனைவருமே ஆசிரியர்களின் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று பல்வேறு வகைகளிலும் பல்வேறு வழிமுறைகளிலும் முயன்று தோற்று சரணடைந்து இருக்கின்றன. 
இன்று விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக அரசாங்கம், அதிபர் – ஆசிரிய தொழிற்சங்கங்கள் மாணவர்களுடைய கல்வி கருதி, எதிர்காலம் கருதி எடுத்த முன்னேற்றகரமான சில முடிவுகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததாக பெருமை  பீற்றிக் கொள்ளும் நிலைமை கேலிக்குரியதாகும். 
தமது போராட்டத்தின் நியாயப் பாட்டை மீண்டும் மீண்டும் உரத்துச் சொல்லும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் , போராட்ட இலக்கினை வென்றடையும் வரை போராட்டத்தை தொடர்ந்த வண்ணமே இருப்பார்கள். 
அதற்கான மாற்று வடிவங்களை அவர்கள் காலத்திற்கு ஏற்பவும் மாறுகின்ற சூழலுக்கேற்பவும் கையெடுத்து வந்திருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் முதல் நாளிலிருந்தே  'முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் தொழிற்சங்கம்' ஈடுபாட்டோடும்,உறுதியோடும்   அதிபர் ஆசிரியர் கூட்டமைப்போடு இணைந்து பயணித்திருக்கிறது. இனியும் அனைத்து ஒத்துழைப்புக் களையும் நல்கி பயணிக்கும்.. 
 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முடிவின்படி பாடசாலைக்கு செல்லும் அதிபர் ஆசிரியர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டார்கள் என்பதாக அர்த்தப்படாது என்பதை அரசாங்கத்திற்கு நினைவுப் படுத்திக்கொள்ளும் அதே வேளை, அதிபர் ஆசிரியர்கள்
 இன்றைய தினம் பிற்பகல், நாடு முழுவதிலும் உள்ள பிரதான மற்றும் சிறு நகரங்களில்  தமது போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வே.தினகரன்
செயலாளர்
முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen