மக்களின் கண்ணீரையையும் வேதனையையும் சுமக்கின்ற அரசாங்கமாக மாறும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் அலட்சியப் போக்கு நிலவுமானால் அது பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக் கொண்ட கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த் குமார் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில் தொழில் அமைச்சரும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
1000ரூபா வேதன அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வராவிட்டால், மக்களின் கண்ணீரையையும், வேதனையையும் சுமக்கின்ற அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு சம்பந்தமான கூட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று சந்திப்பை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தன.
இதன்போது பிரதமர் இதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தி சந்திப்பை மேற்கொண்டு, இன்றைய தினத்துக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பான தீர்மானத்துக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுசெயலாளருமான வடிவேல் சுரேஷ், நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்க்காவிட்டால், அரசாங்கத்தின் பங்காளிகட்சியாக தொடர்ந்து நீடிப்பது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது என்று, அமைச்சர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருடன், இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனும் நேற்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எதிர் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி குறிப்பிட்டுள்ளது.Parliament