செய்திகள்

மக்களின் வரிப்பணத்திலா தோட்ட மக்களுக்கு சம்பளம்? அரசின் சம்பள திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருமி அமைப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை முற்றுபெறாத நிலையில், தொழிலாளர்களினதும், அவர்களின் ஆதரவு சக்திகளினதும் போராட்டம் தொடர்கையில், அரசிற்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, அரசின் பாதீட்டு திட்டத்தின்போது சம்பளம் அதிகரிப்படும், ஒரு வருடத்தில் பெருந்தோட்டம் மறுசீரமைக்கப்படும் என எட்டப்பட்ட முடிவுகள் கம்பனிககளை பாதுகாக்கவும், தொழிலாளர்களை ஏமாற்றி போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதனை முடிவிற்கு கொண்டுவரவும் எடுக்கப்பட்ட கூட்டுசதியாகவே ஒருமீ மலையக சிவில் அமைப்புகளின் ஒன்றியம் சந்தேகம் கொள்கின்றது.

தொழிலாளர்களுக்கு 1000ரூபா பெற்றுக்கொடுப்பதாக தொழிற்சங்கங்கள் உறுதியளித்த பின்பே அதிகரித்த நாளாந்த செலவுகளுக்கு மத்தியில் தொழிலாளர் சமூகத்தினர் அதனைக் கோரிக்கையாக போராட்ட வடிவில் வெளிப்படுத்தினர். தொழில் தருநர்களும், தொழிற்சங்கங்களும் நரித்தனத்தோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வெறும் 20ரூபா அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொழிலாளர் வர்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி சம்பள அதிகரிப்பு நியாயமற்றது. உரிய சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்போம். இல்லையெனில் அரசிலிருந்து வெளியேறுவோம் என அரசியல் நாடகமாடி சம்பள வர்த்தமானி அறிவித்தலையும் பிற்போடச் செய்தது. இவர்களின் அரசுடனான பேச்சுவார்த்தையின் முடிவும், பதவி விலகளும் சம்பள அதிகரிப்பும் போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு கீழேயே தொழில் புரிகின்றனர். இலாபம் கம்பனிகளிடமே குவிகின்றது. ஆனால், சம்பள அதிகரிப்பு விடயத்தில் தமது முடிவே இறுதியானதென இவர்கள் ஒன்றைக்காலில் நிற்பதால், உள்நாட்டு, வெளிநாட்டு கடனிலும் திட்டமிடப்படும் பாதீட்டில் சம்பள அதிகரிப்பு என்பது கம்பனிகளின் இலாபத்தை பாதுகாத்து பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்வதை நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.

சம்பளம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அது சலுகையோ, மானியமோ அல்ல என்பதை தமிழ் முற்போக்குக் கூட்டணி சிந்திக்க மறந்ததேன். ‘’எமது அரசு நல்லது. நாம் நல்லவர்கள். கம்பனிகள் பெற்றுக்கொடுக்க மறுத்ததை நாம் பெற்றுக்கொடுக்கின்றோம்’’ எனும் அரசியல் நற் பெயரை அரசிற்கும், தமக்கும் உரித்தாக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆடிய அரசியல் சித்து நாடகமாகவே நாம் இதனை உணர்கின்றோம்.

அது மட்டுமல்ல பாதீட்டு திட்டத்தில் அதிகரிப்பப்டும் தொகை எவ்வளவு? எதன் அடிப்படையில்? எவ்வளவு காலத்திற்கு என்பது பற்றியெல்லாம் தெளிவு படுத்தப்படாமை மக்களை ஏமாற்றும் துரோகமாகவே கருத்தப்படல் வேண்டும்.

மேலும், ஒரு வருட காலத்தில் பெருந்தோட்டம் மறுசீரமைக்கப்படும் என்பது தொழிலாளர் சமூகத்தின் வாழ்வு பாதுகாப்பை மையப்படுத்தியா? அல்லது கம்பனிகளின் கவர்ச்சிகரமான இலாப மீட்டலை நோக்காகக் கொண்டா? எனும் கேள்விகளை மலையக சமூகம் சார்ந்து முன்வைப்பதோடு அதனை தெளிவுப்படுத்தாத வரைக்கும் ஒப்பந்தம் வர்த்தமானியில் வெளியிடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இக்கோரிக்கை மீறப்படுமாயின் மலையக சமூக துரோகிகளின் பட்டியல் நீலும் என்பதை நினைவுப்படுத்துவதோடு, உங்களுக்கான உரிய பதிலை இத்தேர்தல் ஆண்டில் மக்கள் ஜனநாயக ரீதியில் அளிக்க தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button