மக்கள் சக்தியே நிரந்தரம் என்பது எனக்கு தெரியும். .?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக பிரதமரிடம் முதலாம் திகதியன்று பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொள்ளவுள்ளது.
இதில் ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபாவை கம்பனிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத பட்சத்தில் பாராளுமன்றத்தில் அனைத்து பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு நிரந்தரம் என்ற மக்கள் சக்தியை வலியுறுத்தி நியாயமான சம்பளத்தை பெரும் வரை இலங்கை வரலாற்றில் பேசப்படும் அளவிற்கு 02.02.2019அன்று முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஹட்டன் நகரில் முன்னெடுக்க கூட்டணி கட்சிகளை சார்ந்த மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோர் அமரவிருக்கின்றனர்.
இதற்கு மக்கள் அணைவரும் அணிதிரண்டு வர வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் வேண்டுக்கோள் விடுத்தார்.
நோர்வூட் நகரில் கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற சம்பளம் தொடர்பிலான விழிப்பூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் திகாம்பரம் அங்கு உரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆரம்பத்தில் புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பாக வழங்கப்பட்ட அடிப்படை சம்பளம் 500 ரூபாயுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு 60 ரூபாயும், ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபாவையும் இணைத்து 700 ரூபாயாக இது 40 வீத சம்பள உயர்வு என சொல்லி அணைவரையும் முட்டாளாக்கி விட்டார்கள்.
சம்பளமாக கிடைத்ததையே மாற்றிவிட்டு இரண்டு கொள்ளைக்கார கூட்டம் இந்த நாடகத்தை அரங்கேற்றி நம்மை மடையர்களாக்கி விட்டனர்.
நாம் அந்த காலத்திலிருந்து 200 வரூடமாக இந்த தவறை செய்கின்றோம். இனிமேலும் செய்யாதீர்கள். நான் நாளை உங்களுக்கு துரோகம் செய்தாலும் என்னை தட்டி கேளுங்கள். நான் பயப்படுவேன். நான் எதை செய்தாலும் சரி என்று எண்ணி இருந்தால் செய்பவர்கள் செய்து கொண்டே போவார்கள்.
மாற்று தொழிற்சங்கங்கள் எம்மை ஏமாற்றிவிட்டன. எப்படி இருந்தாலும் வேறு கட்சிகளில் இருந்தாலும் நாம் ஒரு சமூகம் ஒரே தோட்ட தொழிலாளி இந்த சம்பளத்திற்கு எதிராக போராட வேண்டும்.
அமைச்சு பதவி வைத்திருந்தால் சிலர் மௌனித்து பயப்பிடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அல்ல. காட்டிக்கொடுத்த இவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அது அந்த காலம் தமிழ் முற்போக்கு கூட்டணி 30.01.2019 அன்று கூடி அதன் தலைவருடன் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அமைச்சு அதிகாரம் தேவையில்லை. வாக்களித்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்று. ஆகையால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பேரும் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.
பேச்சுவார்த்தை சாதகம் இல்லை என்றால் இந்த 6 பேரும் அட்டனில் வந்து அமருவோம். போராட்டம் ஒரு நாளில் மாத்திரம் அல்லாது தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். உலகமே இதை அவதானிக்க வேண்டும்.
முழு பூசணிக்காயை சோற்றில் அமுக்கியது போல செய்த இவர்களை தட்டிக் கேட்போம். இப்போராட்டத்திற்கு மக்கள் அணைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும். மக்களை விற்று நான் காசு வாங்கவில்லை. பொய் சொல்லவில்லை. எனக்கு ஏமாற்ற தெரியாது.
மக்கள் சக்தியே நிரந்தரம் என்பது எனக்கு தெரியும். ஆகையால் நியாயமான சம்பளத்தை பெறும் வரை துணிச்சலாக நின்று ஏமாற்றுபவர்களக்கு எதிராக போராடுவோம் என்றார்.
நன்றி வீரகேசரி