மலையகம்

மக்கள் பொய் பிரச்சாரங்களை நம்ப கூடாது மயில்வாகனம் உதயகுமார்.?

எதிர்வரும் 24ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்பில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள பொகவந்தலாவ பொகவான லின்ஸ்டெட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட திறப்பு விழா சம்பந்தமான தெளிவூட்டும் நிகழ்வு ஹட்டன் டிகேடபிள்யு மண்டபத்தில் இடம்பெற்றது.

பொகவான தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 வீடுகள் அடங்கிய புதிய கிராமத்திற்கு வீடுகள் வீ.கே. வெள்ளையன் கிராமம் என பெயரிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான வீ.கே.வெள்ளையன் பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையில் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதிப் பங்களிப்பில் குறித்த 155 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24ஆம் திகதி இந்த வீடுகள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான அமைச்சர்கள் பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, இக் கூட்டத்தில் தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் நிலுவைப்பணம் தொடர்பில் மக்கள் மத்தியிலே செய்யப்பட்டுவரும் பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரவு-செலவுத் திட்டத்தில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு பெற்றுக்கொடுத்து உள்ளதாக தெரிவித்த மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார் கம்பெனிகளிடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டியது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பொறுப்பு என தெரிவித்தார்.

தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மக்கள் மத்தியில் தங்களை சுதாகரித்துக் கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி மீது குற்றம் சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button