செய்திகள்

மட்டக்களப்பு இயல்பு நிலைகள் முற்றாக பாதிப்பு

மட்டக்கள்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று (21) இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் ஒரு தற்கொலைக் குண்டுதாக்குதல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட குழுக்கள் பல கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்தாரி தங்கியிருந்தது தொடர்பான விசாரணைகள் பல்வேறு கோணங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிரிவி கமரா மூலம் கொலையாளி என நம்பப்படுபவர் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கொலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பில் காத்தான்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு சீயோன் தேவாயலத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்களிடம் வழங்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள 5 சட்ட வைத்திய அதிகாரிகளின் பங்களிப்புடன் சடலங்கள் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு சடலங்கள் வழங்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி. கலாராணி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இன்று காலை விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி. கலாராணி கணேசலிங்கம் நடாத்தியிருந்தார்.

எந்தவொரு வெளிநாட்டவரும் இதன்போது பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 22 சடலங்கள் கொண்டுவரப்பட்டதுடன் நான்கு பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்துள்ளதாகவும் மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் 17 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களின் உடலங்கள் இன்று மாலைக்குள் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரு உடற்பாகங்கள் அடையாளம் காணமுடியாத வகையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தாக்குதலின் போது 69 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சை பெற்ற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு, வெள்ளைக் கொடிகளும் பதாகைகளும் பறக்கவிடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு நகர் உட்பட தமிழ் – முஸ்லிம் பிரதேசங்களில் கறுப்பு,வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் இளைஞர்களினால் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் துக்கதினத்தை குறிக்கும் வகையில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுவருகின்றன.

அத்துடன் முஸ்லிம் இளைஞர்களினால் வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுவருவதுடன் பள்ளிவாயல்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com