செய்திகள்

“மதுபானம் இல்லாத மரண சடங்கு” லிந்துலை சென்றெகுலஸ் இளைஞர்கள் சாதித்துக்காட்டினர்

மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல துன்பகரமான சந்தர்ப்பங்களிலும் நம்மில் சிலர் நாற்றம் அடிக்கக்கூடிய அருவருப்பான மதுபானத்தை குடித்துவிட்டு ஆறுதல் அளித்து அமைதியாகவும் மரியாதையாகவும் பன்னவேண்டிய காரியங்களை அமைதியின்றி அசுத்தப்படுத்தி அசௌகரியங்களை ஏற்படுத்துவது மாத்திரமன்றி வீண் செலவுகளையும் ஏற்படுத்திவிடுகின்றனர்.மேலும் குடிகாரர்கள் தாங்கள் குடிப்பதற்காகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் சம்பிரதாயம் என்ற பெயரில் நமது கலாசார, பாரம்பரிய நிகழ்வுகளிலும் அதனை புகுத்தி சாரய கம்பனிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

நாமும் மதுபானம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று நினைத்துக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.சில இடங்களில் மரணம் சம்பவித்த வீடுகளில் மரணசடங்கை செய்பவர்களுக்கும் இரவு சோக இசையை வழங்குபவர்களுக்கும், நல்லடக்கம் செய்யும் போது குழி தோன்றுபவர்களுக்கும் மதுபானத்தை வழங்கி வரும் ஒரு மோசமான கலாசாரம் உருவாகி வருகிறது.

இவ்வாறாக மரணவீடுகளில் மதுபானங்களுக்கு நாம் வழங்கி வரும் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது தடுப்பதற்காக நாம் எடுத்த முயற்சி வெற்றியளித்த மற்றுமொரு சம்பவம் லிந்துலை சென்றெகுலஸ் தோட்டத்தில் பதிவானது.மேற்படி தோட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இரு மரண வீடுகளிலும் எமது முயற்சி சாத்தியமானது.ஒன்று எமது பாட்டி இறந்தப்போது இரவு கண்விழித்தவர்களுக்கும் ,சோக இசையை வழங்கியவர்களுக்கும் நாம் மதுபானம் வழங்கவில்லை. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தேநீரை மட்டுமே வழங்கினோம்.அவர்களும் இதனை ஏற்று தமது ஒத்துழைப்பைவழங்கி இருந்தனர்.

அதேபோன்று எனது நண்பரும் எமது வீதீநாடக குழுவின் பாடலாசிரியருமான ரவிச்சந்திரன் அவர்களின் தாயார் இறந்தப்போது என்னைவிடவும் ஒரு படி மேலே போய் குழித்தோன்றுபவர்களுக்கு மதுபானம் கொடுக்காமல் அதற்காக ஒரு தொகை பணத்தை கொடுத்துள்ளார்.சேவை செய்தவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு அந்தப் பணத்தை சந்தோசமாக பெற்றுக்கொண்டு தமது வீட்டுத்தேவைக்காகவும் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே நாங்கள் ரொசல்ல டெம்பல்ஸ்டோ பகுதியில் இவ்வாறான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினோம்.அப்போது அதை எங்கள் ஊரிலும் ஏற்படுத்த எடுத்த முயற்சி இப்போது வெற்றியளித்துள்ளது.இதெல்லாம் சாத்தியமாகுமா?நடக்குமா?எங்கள் தோட்டத்தில் நடைமுறைப்படுத்த முடியாது ?என்று வீண் பேச்சை பேசி இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை பலவீனப்படுத்துபவர்களுக்கு இதெல்லாம் நல்ல பாடங்களாகும்.

இங்கே யாருமே மதுபானம் அருந்தவில்லை என்றல்ல..அந்த பாவனையை குறைத்து அதற்காக வழங்கி வரும் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்திருக்கிறோம். மதுபானத்தை வழங்கினால்தான் எல்லாம் நடக்கும மதுபானத்தை கொடுத்துதான் எதையும் செய்யமுடியும் என்ற தவறான எண்ணத்தை இல்லாமல் செய்திருக்கிறோம்.தொடர்ந்தும் இதனை நடைமுறைப்படுத்தவும் எமது தோட்ட இளைஞர்கள் தீர்மானித்துள்ளனர்.துர்நாற்றம் அடிக்க கூடிய மதுபானத்தை குடித்துவிட்டு நல்லடக்கம் செய்வதை விட்டுவிட்டு எமது சமய,பாரம்பரிய கலாசார முறையில் நல்லடக்கம் செய்வதே
இறந்தவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்

(அ.ரெ.அருட்செல்வம்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button