மத்திய மாகாணம்- நாவலப்பிட்டி நகர், அருள்மிகு கதிரேசன் திருக்கோயில்
ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

அருளொளி பெருக்கி எங்கும் நன்மைகள் பரப்பும் ஐயா
அகிலத்தோர் நலன் பெறவே அரவணைத்தருள வேண்டும்
உன்னருளாலே எங்கும் நிம்மதி நிலைக்க வேண்டும்
நாவல் நகர் கோயில் கொண்ட கதிரேசப் பெருமானே
மலைசூழ்ந்த உயர் நகரில் நிலைத்து அருள் பரப்பும் ஐயா
மதிதனிலே நீயிருந்து மருட்சியைப் போக்க வேண்டும்
துதிசெய்துன்னடி தொழுவோர் துன்பங்கள் நீங்க வேண்டும்
நாவல் நகர் கோயில் கொண்ட கதிரேசப் பெருமானே
வேல் தாங்கி வீற்றிருந்து நல்லருள் பரப்பும் ஐயா
வெற்றிகள் நமைவந்து சேரவே அருள வேண்டும்
வல்லவுன் கருணையினால் நன்மைகள் பெருக வேண்டும்
நாவல் நகர் கோயில் கொண்ட கதிரேசப் பெருமானே
மயிலேறி வலம் வந்து நலன்களைப் பரப்பும் ஐயா
மாசில்லா வாழ்வை உறுதிசெய்ய வரவேண்டும்
பாரினிலே உன்னருளால் நிம்மதி நிலைக்க வேண்டும்
நாவல் நகர் கோயில் கொண்ட கதிரேசப் பெருமானே
இடர்போக்கி எழுச்சிதந்து நலன் பரப்பும் ஐயா
இசைவான நல்வாழ்வை உறுதி செய்ய வரவேண்டும்
இல்லாமை இல்லா நிலை நீக்கிடவே வரவேண்டும்
நாவல் நகர் கோயில் கொண்ட கதிரேசப் பெருமானே
அழகுமிகு திருக்கோயில் உள் இருந்து அருள்பரப்பும் ஐயா
அச்சமில்லா எம்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்
இந்தாட்டில் எம்முரிமை உறுதிபட வேண்டும்
நாவல் நகர் கோயில் கொண்ட கதிரேசப் பெருமானே.