மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம் வட்டவளை- அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில்
ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

ஆறுமுகம் கொண்டு ஆறுதலைத் தரும் வேல்முருகா
ஆற்றல் தந்தெம்மை வழிநடத்த வேண்டுமைய்யா
நல்லவர்கள் துணைகொண்டு நாமென்றும் உயர்வு பெற
அருள் தருவாய் வட்டவளை கோயிலுறை சிவசுப்பிரமணியப் பெருமானே
பன்னிரு கரங்கள் கொண்டு அருளுகின்ற வேல்முருகா
பயங்களண்டா பெருவாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா
உயர்குணங்கள் கொண்டவர்கள் உறவுகளை நாம் பெறவே
அருள் தருவாய் வட்டவளை கோயிலுறை சிவசுப்பிரமணியப் பெருமானே
மயிலேறி வலம் வந்து அருள் பொழியும் வேல்முருகா
மானமுடன் வாழும் வழி உறுதி செய்ய வேண்டுமைய்யா
முயற்சியுடன் முன்னேறும் வழியினையே நாம் பெறவே
அருள் தருவாய் வட்டவளை கோயிலுறை சிவசுப்பிரமணியப் பெருமானே
அன்னையர் இருவரையும் அருகு கொண்டு அருளுகின்ற வேல்முருகா
அச்சமில்லாப் பெருவாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா
முத்தமிழின் பெருமையுடன் தலை நிமிர்ந்து நாம் வாழ
அருள் தருவாய் வட்டவளை கோயிலுறை சிவசுப்பிரமணியப் பெருமானே
தமிழ்த் தெய்வம் நீயென்ற பெருமை கொண்ட வேல்முருகா
தரணியிலே நம்பெருமை ஒளிர வழி வேண்டுமைய்யா
திடங்கொண்ட மனத்தினராய் உறுதியுடன் நாம் வாழ
அருள் தருவாய் வட்டவளை கோயிலுறை சிவசுப்பிரமணியப் பெருமானே
ஓம் என்ற ஒலியினிலே உறைந்திருக்கும் வேல்முருகா
ஒன்றுபட்டு நாம்வாழ வழிதிறக்க வேண்டுமைய்யா
வேற்றுமைகள் களைந்து வீரமுடன் நாம் வாழ
அருள் தருவாய் வட்டவளை கோயிலுறை சிவசுப்பிரமணியப் பெருமானே.