...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் ஒழிப்பு சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு!

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் ஊழல் ஒழிப்பு சட்டத்தை மீறியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபு தாபி டி10 லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறி  ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் மார்லன் சாமுவேல்ஸ் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

எனவே, அவர் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கௌன்சில் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பரிசு அல்லது பணம் பெறுதல், விருந்தோம்பல் அல்லது பங்கேற்பாளர் அல்லது கிரிக்கெட் விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் வழங்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பிற சலுகைகளை இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தத் தவறியது எனும் பிரிவிலும், 750 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பணத்தை பெற்றுக்கொண்ட முறையை வெளிப்படுத்தத் தவறியது எனும் பிரிவிலும், இலஞ்ச ஒழிப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஒத்துழைக்காதது, இலஞ்ச ஒழிப்பு பிரிவால் கோரப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்காதது எனும் பிரிவிலும், கோரப்பட்ட ஆவணங்களை அழித்தல் அல்லது மறைத்தல் ஆகிய பிரிவிலும் மார்லன் சாமுவேல்ஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் விளையாட்டுக்களில் பங்குபற்றுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் கூறியுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய மார்லன் சாமுவேல்ஸ், 71 டெஸ்ட், 207 ஒருநாள்  மற்றும் 67 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen