கல்விசெய்திகள்மலையகம்

மறைமுகமாக நடத்திச் சென்ற பிரத்தியேக வகுப்பில் இருந்த 31 பேருக்கு கொரோனா

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்ட பிரத்தியேக வகுப்பில் கலந்து கொண்ட 58 பேரில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வகுப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவல்களுக்கமைய கட்டுகஸ்தோட்டை, ரனவன வீதியில் உள்ள தங்குமிடத்தினை கட்டுகஸ்தொட்ட பொலிஸார் சோதனையிட்டு இவ்வாறு பிரத்தியேக வகுப்பு நடைபெற்றதை கண்டறிந்துள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர சாதரணத் தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் சிலரே இவ்வாறு பெற்றோரின் அனுமதியுடன் தங்க வைக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இவர்களில் ஒரு மாணவனுக்கு சுகயீனம் ஏற்பட்டதன் விளைவாக அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொவிட் -19 தொற்று உறுதியானது.

அதனையடுத்தே பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து குறித்த இடத்தை முற்றுகையிட்டனர்.

அதன்போதே அங்கு 52 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி கற்ற விடயம் தெரிய வந்ததுள்ளது. பின்னர், 52 மாணவர்களும் 6 ஆசிரியர்களுமாக 58 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களில் 31 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது.

Related Articles

Back to top button