மலையகத்தின் தேசிய கூத்தான காமன் கூத்து. 

uthavum karangal

ஆங்கிலேயரின் ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலைநாட்டிற்கு கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவர்களின் உழைப்பையும் உடைமைகளையும் மாத்திரம் சுமந்து வரவில்லை. அவர்கள் பின்பற்றிய கலை, கலாச்சார பண்பாடுகளையும் சுமந்து வந்தனர்.

பிரித்தானியரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்குமுறையாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் நடந்தேரிய கொடுமைகளாலும் மீள முடியாத துன்பத்திற்கு ஆளானார்கள்.

இதன் தாக்கம் இன்றும் எம் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும் மன அமைதியை பெறுவதற்காகவும் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவற்றை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இவற்றில் மிக முக்கியமானது கூத்துக்கலையே. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை.

கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது.

அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன. குதிக்காலினை கொண்டு ஆடுவதால் கூத்து எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது . பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரை ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.

மலையகத்தை பொருத்தமட்டில் பிரதானமாக ஐந்து கூத்துக்கள் நடைமுறையில் உள்ளன. காமன் கூத்து,பொன்னர் சங்கர் கூத்து,அர்ச்சுனன் தபசு,வீரபத்திரன் ஆட்டம், நல்லத்தங்காள் கதை இவற்றில் முதன்மையானது காமன் கூத்து ஆகும்.

காமன் கூத்தானது மலையகத்தின் தேசிய கூத்து என இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. காமனை சிவன் எரித்த வரலாற்றைக் கூறுவது காமன் கூத்து என ஒற்றை வரியில் கூறிவிடலாம்.

மாசி பிறந்து விட்டால் கூத்துக்கள் குதூகலிக்கும் என்பர்.மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தில் காமன் கூத்து /காமன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கந்தபுராணத்தில் இருந்தே இதற்கான மூலக்கதை எடுக்கப்பட்டுள்ளது. தென்மாங்கு பானியில் லாவணி பாடல்கள் பாடப்படும். மாசி மாதம் அரங்கேற்றம் என்றால் தை மாதமே தயாராகிவிடுவார்கள்.

காமன் கூத்து நடைபெறும் அந்த வாரமே திருவிழாதான் மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. வருடத்திற்கு ஒருமுறை நிகழ்த்தப்படுவதால் எண்ணற்ற மக்கள் அங்கு ஒன்றுகூடுவர். இக்கூத்தின் அரங்கவெளி காமன் பொட்டல் எனப்படும்.

காமன் கூத்தை பயிற்றுவிக்கும் ஆசான் காமன் மாஸ்டர் என்று அழைக்கப்படுவார். இக்கூத்துககான இசைகருவியாக பிரதானமாக தப்பு பயன்படுத்துகின்றது. மேலும் ஒப்பனைக்காக கிரீடம், புஜம், சலங்கை, பட்டாடை, வில் அம்பு , அரிதாரம் என்பன பயன்படுகின்றன. ரதியும் மன்மதனும் இரு கைகளிலும் சிறிய துண்டு ஒன்றை வைத்திருப்பார்கள்.

ரதிக்கும் மன்மதனுக்கும் காப்பு கட்டுவதோடு ஆரம்பிக்கும் காமன் கூத்தின் கதை கரு ஒன்றுதான். இருந்தாலும் பிரதேசத்திற்கு பிரதேசம் கதையின்அமைப்பிலும் உள்ளடக்கங்களிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. எனினும் எல்லா ஊர்களிலும் பொதுவான படிமுறை ஒன்று காணப்படுகின்றது.

அவையாவன,
• காப்பு கட்டுதல்
• கம்பம் நடுதல்
• விரதமிருத்தல்
• ரதிக்கும் மன்மதன் திருமணம்
• தூதன் ஓலை கொண்டு வருதல்
• வீரபத்திரன் வருகை
• மோகினி வரவு
• கணபதி பூஜை
• தேர்வசந்தன் அழைப்பு
• எமன் வருகை
• வெட்டியான்,வெட்டிச்சி ஆட்டம்
• மதன் ஈசனின் தவத்தை கலைத்தல்
• சிவன் மதனை எறித்தல்
• ரதிதேவியின் ஒப்பாரி
• சிவன் மதனை உயிர்ப்பித்தல்
• சிவனிடம் ஆசி பெறல்
என்ற ஒழுங்கமைப்பில் காமன் கூத்து நடைபெறுகிறது.

காமன் கூத்து கதை சுருக்கம்.

பரம்பொருளான சிவபெருமான் திருக்கைலாயா மலையில் ஆழ்ந்த தவத்துக்குள் மூழ்கியதால் பிரபஞ்சமே ஆட்டம்காண தொடங்கியதாம். இதனால், பாரிய அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இனியும் மௌனம் காத்தால் பேரழிவு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இந்திரலோகம் சென்ற தேவர்கள், நிலைமையை இந்திரனிடம் எடுத்துரைத்துள்ளனர்.

சிவனின் தவத்தைக் கலைத்தால் மாத்திரமே பேரழிவிலிருந்து உலகைக் காக்கலாம் என்பதை அறிந்துக்கொண்ட இந்திரன், அதை செய்யக்கூடிய வல்லமை மன்தமனுக்கே இருக்கின்றது என்பதையும் உணர்ந்துக்கொண்டார்.

இப்படியொரு விடயம் இருக்கின்றது என்ற தூதை இந்திரன் மதனுக்கு அனுப்பினார்.
தூதுவன் அங்குசெல்லும்போது ரதிக்கும், மதனுக்குமிடையில் திருமணம் நடைபெற்றிருக்கும். மாவிளக்குப்பூஜை, பச்சைவில் போன்றனவும் இதற்கிடையில்தான் நடைபெறும்.

தூதுவனின் செய்தியை கேட்டதும், மலர்க் கணைகளைத் தொடுத்து தவத்தைக் கலைக்க தான் தயார் என்ற தகவலை மற்றுமொரு தூதுவன் ஊடாக இந்திரசபைக்கு மதன் அனுப்புவார்.

ஈசனின் பலம் அறிந்த ரதி, தவத்தைக் கலைக்க வேண்டாம் என மன்மதனிடம் எடுத்துக்கூற, அதை அவர் கணக்கில் எடுக்கவில்லை.இந்த சம்பவத்துக்கு நிகரான வகையில் வீரபுத்திரன், காளி, மோகினி போன்ற பாத்திரங்கள் வரும். அதன்பின்னர் ஈசனின் தவத்தை மதன் கலைப்பார்.

சிவனின் சீற்றம் கொண்ட பார்வையால் மதன் அழிந்துபோய்விடுவார்.இந்த தகவலை எரி தூதுவர் ஒருவரே ரதிக்கு எடுத்துச்செல்வார். அதன்பின்னர், தூதூவன், எமன் ஆகிய இருவர் மதனின் உயிரைக் காவிச்செல்ல வருவார்கள். அவர்கள் வந்தபின்னர், ரதியின் ஒப்பாரி புராணம் ஆரம்பமாகும்.

இதன் போது “ஐயய்யோ ஐயய்யோ” என்ற ஓலம் எழுப்பப்படும். தனது கணவரை உயிர்ப்பிக்குமாறு அவர் சிவனிடம் மன்றாடுவார். இரக்கம்கொண்ட ஈசன், மூன்று நாட்களுக்கு பிறகு மதனுக்கு உயிர் கொடுப்பார். இந்நிகழ்வு உயிர் எழுப்புதல் என அழைக்கப்படும்.

காமன் கூத்தின் ஆரம்ப காப்பு கட்டுதலிலிருந்து கடைசியில் மன்மதன் உயிர்பித்தல் வரை நம்பிக்கை என்ற அச்சாணி ஆழப் பொருந்திருப்பதை காணலாம்.

இறுதியில் ரதி வீட்டுக்கு வீடு புலம்பிக்கொண்டு துயரத்துடன் செல்வார். மன்மதன் வேடம் தரிப்பவர் 16 நாட்கள் கட்டுப்பாட்டோடு இருப்பார்.

மேலும் பாத்திரமேற்று நடிப்பவர்கள் தங்களை தமக்கு அளித்த பாத்திரமாகவே கருதி அருள் வந்து ஆடுவர். இதன் போது சுற்றியுள்ளவர்கள் பய பக்தியுடன் இவர்களை வணங்குவர்.

அதுமட்டுமல்லாது காப்பு கட்டப்பட்டதில் இருந்து இறுதிவரை ஊர் மக்களும் கட்டுப்பாட்டோடு இருப்பர். காமனை எரித்த சாம்பலை சக்தி வாய்ந்த பிரசாதமாக எண்ணி அள்ளியெடுத்து வீடுகளுக்கு கொண்டு செல்வர்.

மேலும் பக்திக்காகவும்,சில நேர்த்திக்காகவும், பிள்ளை பேறு வேண்டியும் ,ஊர் செழுமைக்காகவும் நோய் நொடிகள் வராது தவிர்க்கவும் காமன் கூத்து ஆடப்பட்டு வருகின்றது.

நவீனம் நம்மை ஆட்டிப்படைத்த பின்னர் இவ்வாறான மலையக கூத்துக்கள் கவனிப்பாரின்றி இருப்பது வேதனைக்குறிய விடயமே.! எமது பாரம்பரிய கலைகளை பாதுகாப்பது எமது கடமை எனவே கலைகளை காக்க நல்லதோர் கலைஞனாய் முன்வரவேண்டும்.

“கலைஞர்களை பறைகொண்டெழுப்புவோம்
தமிழர் கலாச்சார மரபை மீட்போம்!”
ரா.கவிஷான்,கேம்பிரி

தொடர்புடைய செய்திகள்