மலையகம்

மலையகத்தின் முதலாவது தொழிற்சங்க முன்னோடி அமரர் பெரி.சுந்தரதின் நினைவுநாள் ..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக காலத்துக்கு காலம் பலர் குரல்கொடுத்து வந்திருக்கின்றார்கள் .அப்படி நம் பெருந்தோட்ட மக்களுக்காக வாழ்ந்த நம் முன்னோடிகளை, நினைவுகூருவதென்பது காலத்தின் கட்டாயமாகும்.

நாம் போற்றப்படப்படவேண்டியவர்களில் அமரர் பெரி.சுந்தரம் மிகவும் முக்கியமானவரர் அவரின் நினைவுநாள் பெப்வரி 04ம் திகதியாகும் .(1957.02.4)

பெரி. சுந்தரம் இலங்கையின் மலையகத்தில் மடுல்கெல்லை நெல்லிமலைத் தோட்டத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையில் ஆரம்பித்து, கண்டி திரித்துவக் கல்லூரி, பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறைக் கல்வியைப் பயின்று உயர் கல்வியை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பி.ஏ.எல்.பி, மற்றும் எம்.ஏ பட்டங்கள் பெற்றார். 1925 ஆம் ஆண்டில் செல்வநாச்சியார் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

அக்காலத்து அரசியல்வாதிகளான சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன், டி. எஸ். சேனநாயக்கா ஆகியோருடன் இணைந்து இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கினார். தொழிலாழர் நல உரிமைகள் முன்னணி என்ற தொழிலாளர் அமைப்பை 1919 சூலையில் நிறுவினார். இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டில் உருவான இலங்கை இந்தியர் காங்கிரஸ், அதன் பின்னர் உருவான இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் இருந்து செயல்பட்டார்.

1931 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் அட்டன் தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகி அன்றைய அரசில் தொழில், மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக 1936 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1947 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டு அதன் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் சிறந்த சட்ட மேதையும், செனட் சபை உறுப்பினருமான அமரர் பெரி. சுந்தரம் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து தோட்டத்தொழிலாளர்களுக்காக குரல்கொடுத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் . 1947ஆம் ஆண்டில் முதலாவது பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். புசல்லாவை சரஸ்வதி மகா வித்தியாலயத்தை உருவாக்குவதற்கு அமரர் கே. ராஜலிங்கத்திற்கு பக்கபலமாக இருந்தவர்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் சிரத்தை எடுத்து கற்பிப்பதுடன் அவர்கள் மூட நம்பிக்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பார். செனட் சபை உறுப்பினராக இருந்தபோது தொழிலாளர்கள் வெறும் பந்தயக் குதிரைகள் அல்ல. அவர்களையும் சாதாரண மனிதர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்றார்.

1960களில் இலங்கையில் அரசியல் யாப்பை திருத்துவதற்கு கவர்னர் சிபார்சு செய்திருந்த விடயங்களில் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளையும் விளக்கி அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். கவர்னரிடம் சாட்சியமளித்த தொழிற்சங்கங்களின் பெயர்களும், சமர்ப்பிக்கப்பட்ட மகஜர்களின் விபரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

மலையகத்தில் பெண்கள் பிரசவ காலத்தில் படும் கஷ்டங்களை உணர்ந்த ஒவ்வொரு தோட்டத்திலும் மருத்துவ நிலையம் தாதிகளின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென அரச சபையில் வாதாடி அதனை நடைமுறைப்படுத்திய அரும்பெரும் தலைவர் பெரி. சுந்தரம். இவரது துணைவியார் இ. தொ.காவின் மாதர் சங்கத் தலைவியாக இருந்த காலப்பகுதியில்தான் தோட்டங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

இப்படிப்பட்டதொரு தலைவனை மலையக மக்களும், அவர் சார்ந்திருந்த ஸ்தாபனமும் நினைவுகூருவதோடு இவ்வாறான நல் இதயம் கொண்ட நம் முன்னோர்களை எமது எதிர்கால சமூகத்திற்கு அவர்களின் சேவைகளை அறியத்தர வேண்டும்.

நன்றி .சி. இராஜலிங்கம்… –

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button