மலையகத்தில் திட்டமிட்டு பாடசாலை மாணவர்களை இடை விலக்குவதாக முறைப்பாடு
“மலையகத்தில் திட்டமிட்டு பாடசாலை மாணவர்களை இடை விலக்குவதாக முறைப்பாடு”
மலையக தமிழர் பண்பாட்டு பேரவை தனது ஊடக அறிக்கையில் கண்டனம் தெரிவிப்பு..
மலையக தமிழ் பாடசாலைகளில் கல்வி வலையங்கள் முதல் நிலைக்கு வருவதற்கு எத்தணிக்கின்ற நிலையில், கல்வி திணைக்கள அதிகாரிகளும் சில அதிபர்கள் ஆசிரியர்கள் துணையோடு திட்டமிட்டு பாடசாலை மாணவர்களை இடை விலக்குவதாக முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
நூறு விகித பரீட்சை பெறுபேற்றை கல்வி திணைக்களத்திற்கு முன்வைத்து பாடசாலையின் பெயரையும் தன்னுடைய பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பாடசாலையில் ஒரு முன்னோடி பரீட்சையை வைத்து கூடுதலாக புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு மட்டும் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
நாற்பதுக்கு குறைவாக புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு பல காரணங்கள் கூறி அனுமதி ரத்து செய்யப்படுகின்றது. இது மாணவர்களின் உரிமை மீறல் ஆகும். புலமைப் பரீட்சை, க. பொ. த. சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை அனைத்திலுமே இந்த நிலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
தகவல் தெரிந்த பெற்றோர்கள் சமூக நலன்விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றார்கள். பாடசாலைகளில்
க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் முறை தோற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறிருக்க நன்றாக படிக்கக்கூடிய இன்றைய மலையக மாணவர்கள் பாடசாலையை விடுத்து கொழும்பு தலைநகரம் தள்ளப்படுகிறார்கள். இதனால் பல கலாசார சீரழிவுகளுக்கு மலையகம் முகம்கொடுக்கவேண்டிய நிலையில் மலையக மாணவ மணிகள் சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாகும் நிலை கண்கூடான ஒன்றாகும் .
கல்வி அமைச்சு பல சுற்றரிக்கைகளை தினமும் வெளியிட்டாலும் பாடசாலைகளில் அதனை பின்பற்றப்படுவதில்லை. இந்நிலை தொடருமாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு மலையக மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். பெற்றோரும் மாணவனும் துணைவருமிடத்து நாங்களும் கைக்கோர்க்க தயாரான நிலையில்…
*****************
மலையக தமிழர் பண்பாட்டு பேரவை.
ஊடக செயலாளர்
ஜெயபிரசாத்.