காலநிலைசெய்திகள்நுவரெலியாமலையகம்

வெள்ளநீரில் மூழ்கிய வீடுகள் : நுவரெலியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு.!

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நுவரெலியா – டயகம பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றிரவு ஆக்ரோயா ஆறு பெருக்கெடுத்ததால் மரக்கறி தோட்டங்கள் வெள்ளநீரில் முழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மழை காரணமாக டயகம ஈஸ்ட் தோட்டத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 25 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வீடுகளுக்கு அருகில் இருந்து ஆறுகளின் நீரின் மட்டம் அதிகரித்ததால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 44 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, களுகங்கை மற்றும் ஜின் கங்கையை அண்மித்த ஹொரணை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அத்தனகலுஓயவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல,பிரதேசங்களிலும் சிறயளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடர்ந்தும் பெய்யுமிடத்து, வெள்ளம் அதிகரிக்கலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன.

மழை தொடர்வதனால் தாழ்நில பிரதேசங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com