மலையகத்தில் பொன்னர் சங்கர் கூத்து.

uthavum karangal

1827 ஆம் ஆண்டிலிருந்தே தென்னிந்தியாவிலிருந்து கூழித்தொழிலுக்காக எமது தோட்ட தொழிலாளர்கள் மலையகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவ்வாறு வந்த மக்கள் தங்களது உடைமைகளுடன் அவர்கள் பின்பற்றிய சமய, கலை, கலாச்சார பண்பாடுகளையும் சுமந்து வந்தனர். பிரித்தானியரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்குமுறையாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் அதிகம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அள்ளித்தந்தது பாரம்பரிய கலைகளே. இன்றும் இவை எமது மக்களின் நாடி நரம்புகளில் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன.
இவற்றில் மிக முக்கியமானது கூத்துக்கலையே. மலையகத்தை பொருத்தமட்டில் பிரதானமாக  ஐந்து கூத்துக்கள் நடைமுறையில் உள்ளன.
அவையாவன         

காமன் கூத்து
o பொன்னர் சங்கர் கூத்து
o அர்ச்சுனன் தபசு
o வீரபத்திரன் ஆட்டம்
o நல்லத்தங்காள் கதை
இன்றும் பல தோட்ட புறங்களில் இவை வருடந்தோரும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மாசி பிறந்து விட்டால் கூத்துக்கள் குதூகலிக்கும் என்பர். குதிக்காலினை கொண்டு ஆடுவதால் இதற்கு கூத்து என்று பெயர். கூத்தானது “வட்டக்களரி’ எனும் அரங்கில் நிகழ்த்தப்படும்.கூத்தை பயிற்றுவிக்கும் ஆசான் மாஸ்டர் என்று அழைக்கப்படுவார்.

✒.பொன்னர் சங்கர் கூத்து

கதைமாந்தர்கள்
• குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான்)
• தாமரை (குன்றுடையான் மனைவி)
• பொன்னர் (பெரியண்ணன் – குன்றுடையான் மகன்)
• சங்கர் (சின்னண்ணன்- குன்றுடையான் மகன்)
• அருக்காணித் தங்கம் (அ) தங்காயி (குன்றுடையான் மகள்)
• செல்லாத்தாக் (குன்றுடையான் பங்காளி)
• தலையூர் காளி
• மாயவன்
• சாம்புவன்
• ஈஸ்வரன்
• பெரியகாண்டி அம்மன்
• மகாமுனி

கதை சுருக்கம் 

பொன்னர் சங்கர் கூத்தானது அண்ணமார் வழிபாட்டுடன் தொடர்புடைய கதையாகும். இக்கதை மகாபாரதம் எனும் காவியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பஞ்சபாண்டவர்களின் மறுப்பிறவியே பொன்னர் சங்கர் கதை எனப்படுகிறது.
நம்மைப்போலவே மனிதனாக பிறந்து தெய்வமாக மாறியவர்களே இந்த பொன்னர் சங்கர். இந்தியாவின் திருச்சி மாவட்டத்திலே காணப்படுவது தான் பொன்னிவள நாடு. இங்கு தான் பொன்னர் சங்கர் ஆகியோருக்கான கோவில்கள் காணப்படுகின்றது. மேலும் இதன் அருகிலேயே  “உங்களுடனே நான் இருக்கிறேன்,பிறகு எதற்கு கவலை? உங்களுக்கு பயம் எதற்கு? என்று கூறி அருள்பாலிக்கும் காவல் தெய்வமாக, பிரமாண்டமான, மிரட்டும் விழிகளுடன் விளங்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை மற்றும் காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகியன உள்ளது  இக்கதையின் நாயகர்கள் பொன்னர்,சங்கர் எனும் சகோதரர்களே. இதனால் தான் இக்கூத்து பொன்னர் சங்கர் கூத்து எனப்படுகிறது.


பொன்னர் சங்கர் கூத்தானது ஓர் பெரிய கதை பிரிவாகும். இக்கதையை மூன்று தலைமுறைகளின் கதையாகும் .இக்கதையினை குத்துவிளக்கேற்றி கீழ்வரும் பாடலடியை பாடி ஆரம்பித்து வைப்பார்கள்
“மாரி உனை நம்பினேன்…
மகமாயி உனை நம்பினேன்….
மாரி உனை நம்பி மந்தைக்கு நா வாரேன்…
தேவி உனை நம்பி தெருவீதி நான் வாரேன்…”
பாடலுடன் கதை ஆரம்பிக்கும்.

குன்றுடை கவுண்டர் தாமரை பெரியநாச்சியார் ஆகிய இரு தம்பதியினருக்கும் நீண்ட காலமாக பிள்ளை பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய தாமரை பெரிய நாச்சியார் பிள்ளை வரம் வேண்டி மர உச்சியில் மாபெரும் தவமிருக்கிறாள். தவத்தின் காரணமறிந்த எம்பெருமான் மாயவர் ஈசனிடம் வினவ தவத்தின் பயனாக பொன்னர், சங்கர், அருக்காணி (நல்ல தங்காள்) ஆகியோர் பிறந்தனர்.
பொன்னர் சங்கரின் பிறப்பின் பின்னர்
உறவினர்கள் பொன்னர் சங்கர் இருவரையும் கொல்ல முயற்சித்த வேலைகளில் பொன்னரும் சங்கரும் காணாமல் போகின்றனர். பின்பு தங்காள் மாத்திரம் பெற்றோரிடம் வளர்ந்து வருகின்றார்.பொன்னர் சங்கர் இருவரையும் வீரப்புர காட்டிலிருந்து எடுத்துவந்து அருக்காணி அவர்கள் வளர்த்து வருகின்றார்.  ஐந்து வருடங்களின் பின் காட்டில் விடப்பட்ட பொன்னரும் சங்கரும் ‘வையமலை’ என்பவருடன் சேர்ந்துக்; கொண்டு தமது தாய் தந்தையரை தேடிவந்து  பொன்னி வள நாட்டில் வாழ்கின்றனர்.இந்தப்பகுதியின் தொடர்ச்சி பிறப்பு வளர்ப்பு என்று அழைக்கப்படுகின்றது.

பின்பு பொன்னரும் சங்கரும் வையமாலையுடன் சேர்ந்துக் கொண்டு மூவரும் காட்டு வேட்டைக்கும் புறப்பட்டு விடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சோழ ராஜன் குன்னடையான் கவுண்டரையும் தாமரையாளயும் சூது செய்து கொன்று விடுகின்றான். அவ்வேளையில் தனித்திருக்கும் தங்காளின் புலம்பலைக் கேட்டு பொன்னர், சங்கர், வையமாலை ஆகிய மூவரும் நாடு திரும்பி தம் பெற்றோர்களுக்கு கிரியை செய்ய வருகின்றனர். பெற்றோரின் பிரிவின் பின்னர் தங்காளின் தனிமையை போக்க பொன்னர் செம்பகுல ஆசாரியிடம் சொல்லி பொற்கிளி ஒன்றை கொடுக்கின்றான். அது பேசாமலும் பாலும் பழமும் உண்ணாமல் இருக்கவே உடைத்து எறிகின்றாள். இதனால் பெரியண்ணன் தங்கைக்கு என்ன கிளி வேண்டும் என்று பின்வருமாறு வினவுகிறார்.
நாகமலைக்கிளி கொண்டு வருகிறேன் தங்கையே தங்கையே
அது நாவோடு நானின்று சங்கதி சொல்லிடும் தங்கையே தங்கையே
தோகமலைக்கிளி கொண்டு வருகிறேன் தங்கையே தங்கையே…..
அண்ணன் பிடித்து தருவதாக கூறிய கிளிகளை வேண்டாம் என்று மறுத்த அருக்காணி,
நாகமலை தோகமலை அண்ணா நாலு பக்கம் வீரமலை
வீரமலை நடுவினிலே வீற்றிருக்கும் கூண்டுக்கிளி….
என்ற பாடலினூடாக வீரமலையிலுள்ள கிளியை பிடித்து தருமாறு கேற்கிறாள். அண்ணனை தடுத்து தம்பி சங்கர் வீரபாகுவுடன் வீரமலை சென்று பல போராட்டத்தின் பின்பு கிளியை பிடித்து கொடுக்கிறார். இத்தோடு இரண்டாம் பாகம் முடிவுறுகிறது.

மூன்றாவது பாகத்தில் படுகளமாரும் பொன்னர் சங்கரின் பங்காளிகள் இவர்களை பலி வாங்க காளியின் உதவியுடன் சூது செய்கின்றனர். பின்பு சோழராஜன் சூழ்ச்சியுடன் மாயவன் என்பவனுடன் சூதாட வைக்கின்றான். சங்கர் அச்சூதாட்டத்தில் தோல்வியுறவே அவனை விலங்கிடுகின்றான். பின்பு சங்கரை ஏமாற்றிய சோழராஜன் பொன்னரையும் பலிவாங்க எண்ணி செம்பகுல ஆசாரியைப் பயன் படுத்துகின்றான்.

பொன்னரிடம் சென்று ஆசாரியார் அரசரின் பொன்மரக்காய் ஒன்றினை வைத்திருக்க கொடுத்துவிட்டு தான் கொடுத்தது தங்க மரக்காய் என்று கூறி அதனை கேட்கின்றான். இதனை திருப்பி கொடுக்க முடியாத பொன்னர் செம்பகுல ஆசாரியை கொலை செய்து விடுகின்றான். இதன் பின்னர் சங்கரின் கைகளில் கட்டப்பட்டிருந்த விலங்கு தானாகவே தெரித்து விழுகின்றது. பின்பு சங்கர் பொன்னர் இருந்த இடத்திற்கு வரும் போது மறைவில் இருப்பவரை சங்கர் போருக்கு அழைக்க அப்போது சங்கர் பொன்னர் போன்றோரது பிறவிக்காலமான ஆறு வருடங்கள் முடிந்து விட்டதாக மாயவரின் குரல் கேட்கின்றது. அதையடுத்து சங்கரும் இறக்கின்றார். பின்பு பொன்னரும் தன்னை தானே மாய்த்துக்கொள்கிறார்..
சகோதர்கள் இறந்த சேதியறிந்த தங்காள் கண்ணீர் வடித்து இவ்வாறு புலம்புகிறாள்.
நா என்ன செய்வேன்
ஏது செய்வேன் பெரியண்ணாவே – அண்ணா
ஏது செய்ய போரேணண்ணா பெரியண்ணாவே…..
இதன் பின் தங்காள் தங்களின் குல சாமி பெரியகாண்டி அம்மனிடம் அழுது புலம்பி மன்றாடுகிறாள். இதன் பின்னர் அண்ணன்மாரை படுகளத்தில் இருந்து உயிரெழுப்புவதற்காக பெரியகாண்டி அம்மன் 60 அடி உயரமுள்ள தவசி மரத்தில் ஏறி தவமிருக்கிறார். தவத்தின் காவலுக்கு மகாமுனி எனும் காவல் தெய்வம் கம்பத்தில் கட்டப்படுகிறது.ஒரு பட்சி பறக்கும் வரை அம்மன் தவமிருக்க வேண்டும். தவசி மரத்தில் ஏறும் போது அம்மனுக்கு,
அம்மா…..
நாகமல தோகமலை ஆதி பெரியகாண்டி
நாலுப்பக்கம் வீரமலை தாயே பெரியகாண்டி….
60அடி கம்பம் நட்டு ஆதி பெரியகாண்டி ….
எனும் பாடல் பாடப்படும்.
தவம் முடிந்தவுடன் கீழே வந்த பெரியகாண்டி அம்மன் பொன்னர், சங்கர் ஆகியோரை  ஓமம் வளர்த்து தண்ணீர் தெளித்து  உயிரெழுப்புகிறார். இதன் பின்னர் பெரியகாண்டி அம்மன் மக்களுக்கு ஆசி வழங்குவார். இதன் போது பாடப்படும் பாடல்களை கேட்டு சுற்றி உள்ளவர்கள் தன்னை மறந்து  மெய்சிலிர்த்து பலர் அரளாடுவன்.
குழந்தை வரம் வேண்டியும்,ஊர்செழிக்க வேண்டியும் பல்வேறு சடங்குகளின் அடிப்படையில் இக்கூத்து நடைபெறுகிறது.

கூத்துக்காக தப்பு, மேளம், மிருதங்கம், சங்கு, சேமக்களம், ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்றும் எமது மலையகத்தில் மாணிக்கவத்தை, பெரியமஸ்கெலியா, லெட்சுமித்தோட்டம், அரிசிதோட்டம், ஸ்ரப்பி, நானுஓயா, அப்புத்தளை, சென்.கூம்ஸ், கேம்பிரி, சென்றகுலர்ஸ், கொஸ்லந்த, வட்டவலை, லொனக், செல்வகந்த, ரூவாக்கொல போன்ற தோட்டங்களில் ஆடப்பட்டு வருகின்றது.
இந்த நவீன உலகில் நவீனத்தை விரும்பிய பலர் பாரம்பரிய கலைகளை மறந்துவிட்டனர். இனியும் இவ்வாறு நடக்கக்கூடாது. கலைகளை பாதுகாக்க நல்லதோர் கலைஞனாய் முன்வருவோம்.

“வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழர் கலையாகட்டும்”

ரா.கவிஷான்
கேம்பிரி

தொடர்புடைய செய்திகள்