அரசியல்கட்டுரைசிறப்புசெய்திகள்மலையகம்

மலையகத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்..!

மலையகத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் ஒருவருக்கு வழங்கியுள்ள பதில் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவு முழுமையாக இதோ:

மலையக மக்கள் தொடர்பில், உங்கள் ஆதங்கம், ஆர்வம், ஆய்வு ஆகியவை பாராட்டத்தக்கன. ஆனால், அநேகரை போல் நீங்களும் சில சமூக வளர்ச்சி தரவுகளை கணக்கில் எடுக்கவில்லையோ என அஞ்சுகிறேன்.

மலையக தமிழர் என்றால் அவர்கள் அனைவரும், “1000/= ரூபா நாட்சம்பளத்துக்காக, ஏங்கி நிற்பவர்கள்” என்ற மாயக்கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மலையகம், இன்னமும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்காக, மாற்று வெற்றிப்பாதைகளில் மலையக தமிழ் பரம்பரை குவித்துள்ள வெற்றிகளை குறைத்து எடை போட்டு விடாதீர்கள்.

இந்நாட்டில், மலையக மக்கள் அல்லது மலையக தமிழர் என்றால் அவர்களது ஜனத்தொகை சுமார் 15 இலட்சம். இதில் ஆக 1-1/2 இலட்சம் பேர்தான் இன்று “தோட்டத்தொழிலாளர்கள்” என்று பெருந்தோட்டங்களில் தொழில் செய்கிறார்கள். இதைவிட மூன்று மடங்கு தோட்டங்களில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் தோட்டங்களுக்கு வெளியேதான் தொழில் செய்கிறார்கள். இரு பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட இந்த, தோட்டத்தொழிலாளரது ஜனத்தொகை சுமார் 5 முதல் 10 இலட்சம் வரை இருந்தது. ஆனால், இன்று இல்லை. இது ஏன்? தேடுங்கள். உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

மலையக இளையோர். மாற்று தொழில் முயற்சிகளை நோக்கி, தோட்ட சிறைகளில் இருந்து விடுபட்டு, பல பத்தாண்டுகளுக்கு முன்னமேயே வெளியே போக தொடங்கி விட்டார்கள். மலையக மக்கள் மத்தியில் இன்றுள்ள மிக பின்தங்கிய பிரிவினர்தான், எஞ்சியுள்ள இந்த தோட்டத்தொழிலாளர்கள். இவர்கள் பிரச்சினைதான் சம்பள பிரச்சினை. இந்த பிரிவினரை கைதூக்கி விட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக இந்த இனவாத நாட்டு அமைப்புக்குள்ளே நாம் பாடுபடுகிறோம். எப்படியும் எமது அந்த இலக்கை நாம் படிப்படியாக அடைவோம். எமது தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த நான்கே வருடங்களில், தோட்ட தொழிலாளருக்கு சொந்த நிலம், தனி வீடு பெற்றுத்தந்து, மலைநாட்டில் தமிழ் கிராமங்களை உருவாக்கி, தொழிலாளர்களை கிராமவாசிகளாக்கும் செயற்பாட்டை நாம் ஆரம்பித்து வைத்து விட்டோம்.

ஆனால் “மலையக மக்கள்/தமிழர்” என்று நீங்கள் அழைக்கும் எல்லோரும் “தோட்டத்தொழிலாளர்கள்” என கருத வேண்டாம். இன்று எனது தொகுதி கொழும்பிலும், மற்றும் நாடெங்கும் நகரங்களில், வர்த்தகர், தொழிலதிபர், தனியார் துறை ஊழியர், அரசு ஊழியர், விவசாயிகள், பட்டதாரி, கலைஞர், ஆசிரியர், வெளிநாட்டு பணியாளர், ஊடக துறையினர், மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர் என பல்வேறு பொருளாதார துறைகளில் மலையக தமிழ் சமூகம் சிலிர்த்துக்கொண்டு எழுந்து வளர்ந்து வருகிறது. இவர்கள், மலையக தோட்டப்புறங்களில் பிறந்து, வளர்ந்து, தோட்டத்தொழில் துறையில் இருந்து வெளியேறி, மாற்றுத்தொழில் கண்டு, வெற்றி பெற்றுள்ள பரம்பரையினர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். மலையக தோட்டத் தொழிலாளர் மீது அக்கறை காட்டுவது சாலச்சிறந்தது. ஆனால் அதற்காக மலையக தமிழ் சமூகம், இன்னொரு புறத்தில், இன்று, சொந்த உழைப்பால் பெற்றுள்ள வளர்ச்சியை உணராமல் இருப்பது, அதேபோல் மலையக தமிழர் என்றால் அவர்கள் அனைவரும், “1000/= ரூபா நாட்சம்பளத்துக்காக, ஏங்கி நிற்பவர்கள் மட்டுமே என்பதும், ஏனைய பல்வேறு துறைகளில், சொந்த முயற்சியால் எழுந்து வரும் மலையகத்தை அவமதிப்பதாகும். ஆம், மலையக தமிழர் சமூகம் இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஆனால் கணிசமாக வளர்ச்சிப்பாதையில் பயணித்தும் விட்டது. தோட்ட தொழிலாளர்களாக ஆரம்பித்த மலையக தமிழரின் பயணம், இன்று ஒரு தேசிய சிறுபான்மை இனமாக பரிணமித்துள்ளது. இதை மலையகம் தொடர்பில் ஆய்வு செய்வோர், உரையாடுவோர் கவனத்தில் எடுக்க வேண்டும்.

May be an image of one or more people, people standing and outdoors
May be an image of 6 people, people standing, people sitting and indoor

Related Articles

Back to top button