சினிமாமலையகம்

மலையக தமிழர்களின் வாழ்க்கையை பாடலில் கொண்டு வந்த பிரபல தென்னிந்திய பாடகர் அறிவு …

மாற்றத்திற்கான விடியலின் புதுமைகளில் இந்த ஓர் இளைஞன் சுயாதீன இசையில் சுதந்திரத்தை உணர்த்துகிறார்.” யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…” எனும் வரிகளில் விடியலை விதைத்தவர் தென்னிந்திய திரைப்பட கவிஞரும் ஹிப் ஹாப் பாடகருமான அறிவரசு கலைநேசன். முயற்சி இவரை பலமுறை கைவிட்டாலும் ஒருமுறை கூட முயற்சியை கைவிடாத இவர் சுயாதீன இசையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.

எமது கதையை வெளிப்படுத்த ராப் இசை முறையை கருவியாக்கிய இவர் இன்று கதையாக்கி இருப்பது மலையகத் தமிழர்களின் கறை படிந்த வாழ்க்கையைத்தான்.

19 ம் நூற்றாண்டில் மனித காலடி படாத காடுகளை மாற்றி மாநகரங்கள் அமைத்த மக்களின் மன வலிகளையும் மற்றும் எதிர்பார்ப்பிற்கு அதிகமாக உழைக்கும் மக்களை எதிர்கொண்டு வரவேற்க வேண்டிய உலகம் உழைப்பை சுரண்டி விட்டு உதறித் தள்ளிய உண்மைகளை தன் பாட்டி கொடுத்த அனுபவத்தால் “எஞ்சாமி எஞ்சாமி…” பாடல் வரிகளாக்கியுள்ளார்.

இன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வரும் இந்த வரிகள் வெறும் வரிகளல்ல…. ஓர் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது கருமமே கண்ணாக உழைத்த எம் மலையக மக்களின் வாழ்க்கை. தங்களின் வேர்களின் மரபை மறந்ததாலே தான் இன்று மயக்கத்தில் உள்ளோம் என்று சொல்லும் இவர் முடிந்த வரை செய்வது முயற்சியல்ல முடியும் வரை செய்வது தான் முயற்சி என்பதை உணர்த்தியுள்ளார். “விதையாய் சிறு விதையாய் வந்து விழுந்தோம் சிறு துளியாய் சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம் பெரும் மழையாய்… “,”அதிகாரம் தொட்டு நினைப்ப
மாத்திக்காட்டு உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு…” என்ற வரிகள் அமைக்கப்பட்ட தளம் வேறுபட்டாலும் மலையக மக்களின் நொருங்கிய நெஞ்சிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

மாடாய் உழைத்து ஓடாய் தேயும் மலையக மக்களின் மாற்றத்திற்கான இந்த புதிய படைப்பு முயற்சிகளை சுவாசிப்போம். மலரட்டும் நன்மைக்கான நாளை நமக்காக…..

  • சாருக்சனா-

Related Articles

Back to top button