மலையக தோட்டப்புற மாணவர்களின் கல்வியில் COVID-19 இன் தாக்கமும் அதனை எதிர்கொள்வதற்கான சில வழிமுறைகளும்.

uthavum karangal

COVID-19 இன் தாக்கமானது உலகலாவ ரீதியில் பெரும் பாதிப்பினை உண்டாக்கியுள்ளது. பெரும் செல்வந்த மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள நாடுகளே இதை கட்டுப்படுத்த முடியாது தடுமாறுகின்றது. குறிப்பாக உலகளவில் இதுவரை 186 நாடுகளை சேர்ந்த 1.2 பில்லியன் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், போக்குவரத்து என மக்களின் அன்றாட வாழ்வியலில் COVID-19ன் தாக்கமானது ஒரு பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் COVID-19 இன் பரவல் ஆரம்பித்த உடனேயே அரசாங்கமானது முதலாவது நடவடிக்கையாக பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையுமே முதன்முதலாக மூடியது. மாணவர்களையும் பிள்ளைகளையும் இந்த பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் சமூக பரவலை தடுப்பதுமே இதன் முக்கிய காரணிகளாகும். 2020 மார்ச் 12ம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்றுவரையில் (ஆகஸ்ட் 2020) தனது வழமையான செயட்பாட்டிற்கு திரும்பவேயில்லை. ஆங்காங்கே ஒரு கட்டுப்படுத்தப்பட்டளவிலிலேயே கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தேசிய கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வி நடைமுறைகளை தற்காலிகமாக ஆரம்பித்து வேகமாக அதனை செயற்ட்படுத்தவும் ஆரம்பித்தது. இணையம், தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி போன்ற டிஜிட்டல் வளங்களூடாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இந்த டிஜிட்டல் வளங்களை அணுகும் பாக்கியம் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல் இருப்பதானது இந்த ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வியை பெறுவதில் மாணவ சமூகங்களுக்கிடையில் பெரும் ஏற்றத்தாழ்வை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கையில் தேயிலை தோட்ட சமூகங்களுடைய குழந்தைகளின் கல்வியில் ஒரு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது. ஏற்டகனவே சமூக-பொருளாதார கட்டமைப்பில் பின்தங்கியும் தங்களுடைய உயரிய உழைப்பிற்கேற்ப வருமானத்தை பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்தாலும் அரசியற்கட்சிகளாலும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு இது ஒரு பெரும் நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் 18 வயதிற்கும் குறைந்த பிள்ளைகளை கொண்ட 48 வீதமான (ஏறக்குறைய அரைவாசி) குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே திறன்பேசி (smartphone) அல்லது கணினி (computer) வசதியை கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஏறக்குறைய 34 வீதமான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கே இலத்திரனியல் உபகரணங்களில் இணைய பாவனையை பயன்படுத்தக்கூடிய வசதி காணப்படுகிறது. எனினும் மிகக் குறைந்த சமூக-பொருளாதார பிண்ணணியினை கொண்டுள்ள சமூகங்களில் இந்த எண்ணிக்கை 21 வீதத்திலும் குறைவாகவே உள்ளதாக இந்த புள்ளிவிபரங்கள் சொல்கிறது. இந்த தரவுகளானது பின்தங்கிய சமூகங்கள் இணையவழி கல்வியை அணுக முடியவில்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. 79 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இணையவழி கல்வியை பெற்றுக்கொள்ளாமலிருப்பதும் இந்த எண்ணிக்கையில் தேயிலை தோட்ட சமூகங்கள் கணிசமாக உள்ளடங்கியிருப்பதும் ஒரு துரதிஷ்டவசமாகும்.

இதற்கு மிகவும் பிரதான காரணமாக பார்க்கப்படுவது பெருந்தோட்ட குடும்பங்களின் வறுமை மற்றும் வருமான மட்டம். காலம் காலமாக தேயிலைத்தோட்ட தொழிலையே நம்பியிருக்கும் பெருந்தோட்ட மக்கள் இதுவரை காலமும் அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும், மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளாலும் ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றுவரை மறுக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலகம் போகும் போக்கிற்கேட்ப தங்களை தயார்படுத்திக்கொள்வதென்பது இவர்களுக்கு ஒரு மிகப்பெரும் சவாலாகும். இதன் காரணமாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு COVID-19 பாடசாலை மூடுகையின்போது ஆரம்பித்திருக்கும் இணையவழி கற்றலை அணுகுவது வெறுமனே சாத்தியமில்லை. இதற்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களை (smart phone, computer, tab, etc.) வாங்க ஒரு குறிப்பிட்ட ஆரம்ப முதலீடு தேவை. பொதுவாக பணம் சேமித்து வைத்துள்ள பெருந்தோட்ட குடும்பங்கள் மிகவும் குறைவு. எல்லா மக்களுமே பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு ஒருவரிடம் கடன் பெரும் வாய்ப்புகளும் மிகவும் அரிதாகிவிட்டது. அப்படியே இலத்திரனியல் உபகரணம் ஒன்றை பெற்றுக்கொண்டாலும், அதற்கு தேவையான இணைய இணைப்பு, மின்சார வசதி, தடையற்ற இணையம் என்பவற்றை பெற்றுக்கொள்வதும் இதனால் வரும் மேலதிக செலவுகளை சுமப்பதும் என்பது மிகவும் ஒரு கடினமான காரியமாகும்.

நெருக்கமாக பெரும் எண்ணிக்கையிலான லயன் குடியிருப்புக்கள், பெரிய குடும்பங்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை, காற்றோட்டம் அற்ற, இருட்டாக உள்ள சிறிய அறைகளை அல்லது அறைகள் அற்ற வீடுகள், அண்டை வீட்டுக்காரர்களின் சத்தம் மற்றும் தொந்தரவு என்பன வீட்டில் இருந்தவாறு கற்பதற்கு ஏற்ப பொருத்தமான கற்றல் சூழலினை கொண்டிருப்பதில்லை. அது மட்டுமல்லாது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் ஆன்லைன் (online) இலத்திரனியல் கருவிகளைப் பாதுகாப்பான வழியில் பாவிப்பது, அதன் மூலம் வரும் எதிர்மறையான ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்வது போன்ற புரிதலும் போதுமான விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளது. இதையும் தாண்டி பெருந்தோட்ட மாணவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு இணையவழி அல்லது தொலைக்கல்வி முறைமையிலான கல்வி கற்பதென்பது இலகுவான காரியமல்ல. இதனால் நகர்ப்புற மாணவர்களோடு ஒப்பிடும்போது தோட்டப்புற மாணவர்களே இந்த பாடசாலை மூடுகையினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. கடந்த 5 மாதங்களில் அநேகமான தோட்டப்புற மாணவர்கள் கல்வி சூழலில் இருந்து அதிகம் விலகியே இருக்கிறார்கள். இது அவர்களை வயதுக்கு மீறிய தேவையற்ற விடயங்களில் ஈடுபடுத்தவும், மீண்டும் கற்றலை மேற்கொள்ள தடையாகவும், பாடசாலை இடைவிலகளையும் ஏற்படுத்தும் காரணிகளாகவும் அமைந்துவிடும். இனிவரும் காலங்களில் பாடசாலைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பும்போது, மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்குவார்கள். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும்கூட பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. இந்த வருடத்திற்கான பாட அலகுகளை பூர்த்திசெய்தல், தேசிய கல்வி நிறுவனத்தால், கல்வி காரியாலங்களால், மற்றும் ஆசிரியர்களால் நடாத்தப்பட்ட இணைய பாட அலகுகளை எந்த அளவில் கருத்திற்கொள்வது என்பதிலான பாடசாலைகள் மற்றும் கல்வி வலயங்களிற்கிடையிலான வேறுபாடுகள் மீதமிருக்கும் வருடத்திற்கான காலப்பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த COVID-19 ஆனது இணைய மற்றும் தொலைக்கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் நன்கு புரியவைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த முறைமையிலான கல்வி நடவடிக்கைகள் பல தசாப்தங்களாக மேலை நாடுகளில் நடைமுறையில் இருந்துவரும் ஒன்றாகும். மாணவர்கள் தான் விரும்பியதை தேடி படிக்கும் அநேகமான வசதிகள் இணையத்தில் தற்போது உள்ளன. பல்வேரு வகையான அறிவுத்திறன்களை வளர்த்துக்கொள்ளும் வசதிகள் இணையத்தில் இலவசமாக கூட கிடைக்கின்றன. போட்டி நிறைந்த இவ்வுலக நடைமுறையில் ஒருவருக்கொருவர் தன்னாலான திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் என்பது அவசியமாகிவிட்டது. பிரபலமான உலக பல்கலைக்கழகங்களின் கற்கைநெறிகளை எங்கள் நாட்டிலிருந்தே கற்றுக்கொள்ளும் வசதிகள், கற்கை நெறியினை பூர்த்திசெய்து பட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ளுவதற்கான பொறிமுறை என்பன உருவாகியுள்ளது. நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை தாண்டி உண்மையான போலியற்ற பட்டங்களை புகழ்பெற்ற பல்கலைக்கழகளில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இந்த இணையவழி மற்றும் தொலைக்கல்வியின் வளர்ச்சியூடாக உருவாகியுள்ளது. Google, Microsoft போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் உலக பல்கலைக்கழகங்களை நிறுவும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.

ஒரு காலத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அநேகமான பாடசாலைகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை. இந்த முக்கிய பாடங்களை நன்கு கற்காமல் பாடசாலை கல்வியை முடித்த அநேகமானவர்கள் எமது சமூகத்தில் உள்ளனர். இன்றும் கூட அநேகமான பாடசாலைகளில் நன்கு பயிற்சி பெற்ற இப்பாடங்களை கற்பிக்ககூடிய ஆசிரியர்கள் இல்லை. இந்த ஒரு ஆளணி பற்றாக்குறையை இணையவழி கற்றல் ஓரளவிற்கு ஈடுகட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக COVID-19 இற்கு பிறகு இலங்கை பாடசாலைகளின் கல்வி பாடத்திட்டங்களை கொண்ட இணையவளங்கள் (digital resources) கணிசமாக உருவாக்கம் பெற்றுள்ளன. மிகவும் புலமையும் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடங்களை எந்த மாணவரும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு இலவசமாக இணையதளங்களிலும் YouTube தளங்களிலும் பெறக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தேசிய கல்வி நிறுவகம் – NIE (http://nie.lk/vmaterial), E-Kalvi (http://www.ekalvi.org/), Jaffna Hindu College (http://www.jhc.lk/e-learning-video-lesson/), DP Education (https://www.dpeducation.org/) போன்ற தளங்களும் அதனுடன் சேர்ந்து ஆக்கங்களை உள்ளடக்கியுள்ள YouTube தளங்களும் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை பாடங்களை இலத்திரனியல் திரைகளில் கொண்டுவருகிறது. இந்த மாதிரியான இணையவளங்கள் இப்போது அதிகரித்திருப்பத்திற்கும் மாணவர்களும் பெற்றோர்களும் இதுபற்றி அறிந்துகொண்டிருப்பதற்கும் COVID-19உம் அதனுடன் சேர்ந்த பாடசாலை மூடுகையும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எனவே விரும்பியோ விரும்பாமலோ இணையவழி கல்வி எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகப்போகிறது. வகுப்பறை கல்வியையும் அதில் உள்ள மாணவர்-ஆசிரியர் தொடர்புகளையும் இணையவழி கற்றல் ஒருபோதும் ஈடுசெய்யாது. தனியாக பாட அலகுகளை மற்றுமன்றி பல்வேறுவிதமான கற்றல், அனுபவங்கள், பழக்கவழக்கங்கள், பாடத்திட்டம் சாராத செயற்பாற்று ஆளுமைகளை வகுப்பறை கல்வி வளர்த்துவிடுகிறது. முழுமையாக இணைய கல்வி என்பதும் மாணவர்களை இயந்திரம் போல் உருவாக்கிவிடும். எனவே எதிர்காலத்தை மனதில் நிறுத்தி ஒரு கலப்பு கற்றல் (Blended learning) பொறிமுறைக்கு எங்களை தயார்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. இதற்கான வளங்களை பெற்றுக்கொள்வதும் எங்களை தயார்படுத்திக்கொள்வதும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. மேற்சொன்னதுபோல் மலையக தோட்டப்புற மக்கள் இதனை பெற்றுக்கொள்வதில் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்குவார்கள். ஆனாலும் இதை நிவர்த்திசெய்ய சரியான பொறிமுறைகளை உருவாக்கி எங்களையும் உலக மாற்றத்திற்கேட்ப தயார்செய்துக்கொள்வதே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இணையக்கல்வி என்பது கொரோனா காலத்திற்கு மட்டுமே என்றல்லாது கொரோனா மூலமாக எங்களுக்கு இணையக்கல்வி என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றே எடுத்துக்கொள்ளல் வேண்டும். ஆசிரியர்கள் தங்களை இந்த கலப்பு முறை (இணைய மற்றும் வகுப்பறை) கற்பித்தலுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மற்றுமன்றி ஆசிரியர்களும்கூட இந்த இணைய கல்வி முறையினூடாக பெரும் நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆசிரியர்கள் அவர்களின் திறமை மற்றும் தகுதி என்பவற்றை தாண்டி அவர்களிடம் உள்ள கற்பித்தல் கலை மிகவும் முக்கியமானது. வெவ்வேறு திறமை மட்டங்களை கொண்ட மாணவர்களை எப்படி ஒரே வகுப்பறையில் கையாள்வது போன்ற நுணுக்கங்கள், மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியராக எப்படி கற்பிப்பது என்பது பற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள இணைய வளங்கள் மூலம் தெரிந்துகொண்டு தமது வகுப்பறையிலும் அவற்றை நடைமுறைப்படுத்தலாம். எனவே அதிபர்கள், கல்வி அதிகாரிகள் இதற்கான வளங்களை அரசாங்கத்தினூடு பெற்றுக்கொடுப்பதிலும், ஆசிரியர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் பயிற்சியினை வழங்கிடவும் வழிசெய்திடல் வேண்டும். இணைய கல்வியில் மாணவர்கள் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை அறிந்திட கண்காணிப்பு பொறிமுறை ஒன்றை அமைத்திடவும் வேண்டும். பாடத்திட்ட அலகுகள் மற்றுமன்றி இணையத்தினூடாகவே மாணவர்களுக்கு நன்னெறி பண்புகளையும் மனித விழுமியங்களையும் (moral and human values) கற்றுக்கொடுத்திடவும் வழிவகைகளை செய்ய வேண்டும்.

பௌதீக வளங்கள் பற்றாக்குறையே பெருந்தோட்ட பாடசாலைகளில் காணப்படும் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். பெரிய நகர்ப்புற பாடசாலைகள் அனுபவிக்கும் அதே வளங்கள் பெருந்தோட்ட பாடசாலைகளில் இல்லை. இந்த சவால்களை பின்வருமாறான முற்சிகளை மேற்கொண்டு நிவர்த்திசெய்திட வழிவகைகளை செய்திடலாம்.
1) அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள், சமூக நலன்விரும்பிகள், கல்வி சமூகம், வர்த்தக சமூகம், வசதிபடைத்தவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஊடாக நிதி அல்லது வளங்களை பெற்றுக்கொள்ளல். (பெருந்தோட்ட கல்வி நிலையை உயர்த்திட இவர்கள் எல்லோருடைய அர்ப்பணிப்பு மிக முக்கியமானதாகும்)
2) பாடசாலைகளில் இணையவழி கல்வி ஆசிரியர் குழுக்களையும், தோட்டப்புறங்களில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளையும் உருவாக்கி இந்த இணையவழி கல்வியை செயற்படுத்துதல்.
3) இணைய வசதி உள்ளவர்களுக்கு நிகழ்நிலை (online) பாடங்களையும் இணைய வசதி அற்றவர்களுக்கு அகல்நிலை (offline) பாடங்களையும் கற்றிட வழிசெய்தல் வேண்டும். இதற்காக பெற்றோர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் இணைந்து லயன் வீடுகளில் யாராவது ஒரு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை (Smart TV) கிடைக்கும் நேரங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு பாவித்திட வழிவகைகள் செய்யலாம். ஒரே வகுப்பை சேர்ந்த மாணவர்கள் ஒரு மாணவர் குழுவாக அமைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
4) இணையவழி கல்வியில் புலமையும் பரீட்சயமும் உள்ள ஆசிரியர்கள், மற்றும் கல்வி சமூகத்தினுடைய உதவியை பெற்று மற்ற ஆசிரியர்களுக்கும் இதனை விளங்கச்செய்து பயிற்சி அளிக்கலாம். அதிபர்கள் இதற்கான ஒரு பொறிமுறையினை பாடசாலைகளில் ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
5) மாணவர்களுக்கு இணைய கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வரும் இணைய குற்றங்களில் (cybercrime) இருந்து தம்மை பாதுகாப்பதுபற்றி தெளிவுபடுத்தலாம்.
6) பெருந்தோட்ட கல்வி சமூகம் இணையவழி கற்றல் சம்பந்தமான நன்மைகள், கணினி ஊடுருவிகளால் (hackers) வரும் ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ளல் போன்றன பற்றி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடத்தில் ஒரு தெளிவை உண்டாக்க வழி செய்யலாம்.
7) பாடசாலைகளில் ஆசிரியர் இல்லாத பாடங்களுக்கான பாட நேரங்களை இணையவளங்கள் (digital resources) கொண்டு நிவர்த்தி செய்யலாம். நேரசூசியில் இதற்காக நேரம் ஒதுக்கி கொள்ளலாம், இதற்காக தனியாக தொலைக்காட்சி பெட்டியை (Smart TV), ஒளிப்படக்காட்டியை (projector) அல்லது கணினிகளை கொண்ட வகுப்பறை ஒன்றை நிரந்தரமாக நிறுவிக்கொள்ளல். இந்த வளங்களை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் ஒரு பொறிமுறையை பாடசாலைகள் உருவாக்கி கொள்ளல். இதற்கான நிதியினை மேலே (1)இல் பட்டியலிடப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம்.
8) பாடசாலை வகுப்பறை கல்வியை பாதிக்காதவாறு இணையவழி கல்வியும் சேர்ந்து பயணித்திட, மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிபரும் கல்வி அதிகாரிகளும் ஊக்கமளித்திடலாம்.
9) பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மாகாண கல்வி திணைக்களங்கள் இணையவளங்களை உருவாக்கிட அல்லது வேறுவழிகளில் பெற்றுக்கொடுத்திட ஏற்டபாடுகளை செய்யலாம் (இந்த செயல்முறை சில மாகாண கல்வி திணைக்களங்களில் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது).
10) ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் இணையவழி கற்பித்தல் பயிற்சிகள், கவனத்தை ஈர்க்கக்கூடிய இணையவளங்களை உருவாக்குவது எப்படி, கணினி ஊடுருவிகளால் (hackers) வரும் ஆபத்துகளை அறிந்துகொள்ளல், அதிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது போன்ற பாட அலகுகளை உள்ளடக்கி ஆசிரிய மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்.

COVID-19 முடிந்ததன் பின் பழைய இயல்பு நிலைக்கு வாழ்க்கை திரும்புவது என்பது மிகவும் ஒரு கேள்விக்குறியே. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், போக்குவரத்து என்பனவற்றில் புதியதொரு இயல்பு நிலைக்கு (New Normal) எங்களை நாங்கள் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை வந்துள்ளது. பெருந்தோட்ட சமூகம் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை நேர்மறையாக மட்டும் கருதாது இது எவ்வாறான ஒரு படிப்பினையை எங்களுக்கு தந்திருக்கிறது, இதிலிருந்து ஆக்கபூர்வமாக என்னவற்றை எடுத்து செல்லலாம் என்பதை கல்வி சமூகம் உணர்ந்து எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கலாநிதி. S. K. நவரட்ணராஜா, Ph.D., P.E.
சிரேஷ்ட விரிவுரையாளர்
பொறியியற் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்

தொடர்புடைய செய்திகள்