மலையகம்

மலையக மக்களுக்காக கொழும்பு ஸ்தம்பிதமாகும்

 

மலையகத்தில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பரபரப்பான நிலைமை அண்மைக்காலமாக  நிலவி வருகின்ற காலகட்டத்தில், சம்பள பிரச்சினைக்கு சரியான தீர்வு எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் வராவிட்டால், தலைநகரையே ஸ்தம்பிக்கச் செய்ய போவதாக அதற்கு தாம் தயார் நிலையில் இருப்பதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் புரையோடிப் போயுள்ள, மலையகப் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் விவகாரம் தொடர்பில், தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைகள் மறுபுறம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாத தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றன.

இவ்வாறு பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அனைவரது சிந்தனையும் ஒன்று தான் என்பது தெட்டத் தெளிவாகப் புரிகிறது.

குறித்த சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் 22 நிறுவனங்களும் மக்களின் உழைப்பை சுரண்டவதிலும், இலாபம் சம்பாதிப்பதையுமே நோக்காகக் கொண்டுள்ளனரேத் தவிர தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

தோட்டங்களிலுள்ள வடிகான்கள் முறை தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.இதனை பராமரிப்பதற்கான செலவு அதிகம் என இதனை இன்று முற்றாக நிறுத்தி விட்டனர்.

பெறுமதிமிக்க மரங்கள் வெட்டபட்டு, பாரிய இலாபங்களை நிறுவனங்கள் சம்பாதித்து வரும் நிலையில், மலையக மக்களின் சம்பள பிரச்சினை என்று வரும் போது தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதாக இந்த நிறுவனங்கள் காரணம் காட்டுகின்றன.

எனவே ஒட்டுமொத்த இலாபத்தை மாத்திரமே இந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களைப் பொறுப்பேற்றனர்.

தேயிலை விலையை நிர்ணயிப்பது, விற்பனையாளர், வாங்குவோர், தரகர் ஆகிய மூவரும் தான் தேயிலை விலையை நிர்ணயிக்கின்றனர். இங்கு இந்த மூவருமே ஒரே ஆளாகத்தான் இருக்கின்றனர்.

மக்களின் சம்பள பிரச்சினை வந்தவுடன் தேயிலை விலையில் வீழ்ச்சியென புதிய பிரச்சினையை இவர்கள் கொண்டு வருவார்கள். ஆனால் இவர்களது ஏமாற்று வேலைகள் தற்போது செல்லுபடியாகாது.

இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கமானது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தெளிவாக இருக்கின்றது.

அத்துடன், தமது கட்சிக்கு தார்மீகப் பொறுப்பும் உள்ளது. ஊக்குவிப்பு தொகையிலோ, தேயிலை நிர்ணய விலையிலோ நம்பிக்கை கிடையாது.

எனவே அடிப்படை சம்பளத்தை இதுவரை இவ்வளவு தான் சம்பளமாக வழங்கவேண்டும் என நாம் தீர்மானிக்கவில்லை.

ஆனால் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மக்களின் அடிப்படைச் சம்பளம் அதிரிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் கோரிக்கை.

நாம் எதிர்பார்க்கும் தொகையை ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பதில் சிக்கல் உள்ளது காரணம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் மிக விரைவில் இது தொடர்பில் அறிவிப்போம். அவர்கள் நிர்ணயிக்கும் விலையை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை.

முடிந்தால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருப்போமே தவிர, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கமாட்டோம்.

இம்முறை நிறுவனங்கள் சொல்லும் தொகையை நாம் தொழிலாளர்களிடம் நேரடியாகச் சொல்லுவோம்.

தோட்டத்தொழிலாளர்கள் சரியென்று சொன்னால் மாத்திரமே தான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் என்று தெரிவித்ததுடன், மக்களது எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்பை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button