அரசியல்மலையகம்

மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் – ஜனாதிபதி.

மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு அவர்களுக்கு சிறந்த தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சம கல்வி உரிமையை வழங்குவதற்காகவே அனைத்து மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் மாணவர்களின் எதிர்கால சாதனைகளை கருத்திற்கொண்டு கடந்த நான்கு வருட காலத்தினுள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மலையக பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான முனைப்பினை மேற்கொள்வதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், நிமல் சிறிபால டி சில்வா, செந்தில் தொண்டமான், அனுர விதான கமகே உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு இந்த பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

Related Articles

Back to top button