மலையகம்

மலையக வரலாற்றில் முதன் முதலாக ஒரு தோட்ட தொழிலாளிக்கு பிரியாவிடை நிகழ்வை நடத்திய றைகம் கீழ் பிரிவு மக்கள் ….


பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் நம் உறவுகள், அவர்கள் பணி செய்யும் ஆண்டுகள் நிறைவுற்று ஓய்வு பெறும் நாளில் அவர்களுக்கு பிரியாவிடை கௌரவங்கள் வழங்கப்படுவதில்லை.


சுமார் முப்பது, நாற்பது ஆண்டுகள் தோட்டத்தில் தொழிலாளியாக அந்த மண்ணில் வியர்வை சிந்தி உழைத்த என் உறவுகள் கண்டுக் கொள்ளப்படாமலேயே தோட்டங்களிலிருந்து ஓய்வுப் பெற்று மறைந்து போனவர்கள் பல்லாயிரம் பேர்.


அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள், வெறும் தொழிலாளர்கள்தானே என்ற பார்வையே காலாகாலமாக நம்மவர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் தோட்டத்திற்கு அதிகாரியாக பணியாற்ற வரும் யாரோ ஒருவன்.. சுமார் பத்து ஆண்டுகள் பணி செய்து விட்டு வேறு ஊருக்கு மாற்றலாகி போகும் போது அந்த நபருக்கு மாலை அணிவித்து, ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கி, வணங்கி அவர்களை வழியனுப்பி வைப்பதையே நமது சமூகம் ஆண்டாண்டு காலமாக செய்து வந்ததை நான் அறிவேன்.

அந்த காட்சிகளை பார்க்கும் போது இந்த பிரியாவிடை கௌரவம் நம் தொழிலாளர் உறவுகளுக்கு வழங்கப்படனும் என்ற ஏக்கம் என்னுள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

அந்தக் கனவு நேற்று நிறைவேறியதில் நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.
இங்கிரிய, றைகமையில் கடந்த 1973ல் இருந்து 2021 நேற்று வரை சுமார் 48 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றியவர்தான் செல்லவரட்ணம் என்கிற செல்லா தலைவர்.

தாம் பணி செய்த காலத்தில் சாதாரண தொழிலாளியாகவும் அதன் பிறகு தமது வேலைப் பணியின் தனித் திறமையால் கங்காணியாகவும் பதவிவகித்த அவர் தோட்டத் தலைவராகவும், மாவட்டத் தலைவராகவும் பணியாற்றி வந்ததோடு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இறைப் பணி செய்து வருவதோடு, றைகம் கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

30-04-2021 நேற்றையஅன்று அவர் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார். அவர் கங்காணியாக பணியாற்றிய அந்த தேயிலை மலை தொழிலாளர்களால் பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. அதன் போது செல்லா தலைவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை தொழிலாளர்கள் வழங்கினார்கள்.

தலைவரும் சில நினைவுப் பரிசுகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
தொழிலாளர்களை தொழிலாளர்கள் கொண்டாடும், கௌரவிக்கும் இந்த நிகழ்வு முன் மாதிரியான முதல் நிகழ்வாகவே நான் பார்க்கின்றேன்.

விமர்சனங்களை கடந்து ‘ஒன் மேன் ஆர்மியாக’ வலம் வரும் செல்லா தலைவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தொழிலாளர்கள் உண்மையிலேயே மாற்றி யோசித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம் தோட்டங்களுக்கு இது புதுசு!

பழைய (மாத்தியா) மரபை தகர்த்து புதிய மரபை படைப்போம்!
நம்மவர்களை கொண்டாடுவோம்!!
பட உதவி: ரஞ்சனி சுரேஸ்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com