செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் பஸ் சேவையும் ரயில் சேவையும் இடைநிறுத்தம்

கொரோனாத் தொற்று நிலமையினை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை இன்று நள்ளிரவு தொடக்கம் இடைநிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டு அமுலில் இருக்கும்.

இதேவேளை, அரச சேவை ஊழியர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து சேவையும் இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். அம்பேபுஸ்ஸ, கொச்சிக்கடை, அலுத்கம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவுக்கு பின்னர் அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

எனினும் வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் 48 ரயில்களும் இன்று நள்ளிரவின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவின் பின்னர் மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button