செய்திகள்

மாணிக்கம், ஆபரண ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

மாணிக்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியின் போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

மாணிக்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் ஏற்றுமதி செலாவணியை அதிகரிப்பதற்கு சுற்றுலாத்துறை போன்றே மாணிக்கம் மற்றும் ஆபரண துறையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மாணிக்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்களுக்கான சகல வசதிகளும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைக்கு அமைய சுற்றுலா விற்பனையை மையமாகக் கொண்ட இலங்கையில் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்துவதில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

நாட்டில் மாணிக்கம் மற்றும் ஆபரண துறையை உலகளாவிய ரீதியில் பிரபலப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார். அப்போதைய ஜனாதிபதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாணிக்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதிக்காக 2015ஆம் ஆண்டு வரை வழங்கிய நிவாரணம் கடந்த அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டதாகவும், ஏற்றுமதியில் நேரடியாக தாக்கம் செலுத்தும் இந்த நிவாரணத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் மாணிக்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

வரவு-செலவு திட்டத்தினூடாக ஏற்கனவே ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகு தெரிவித்த பிரதமர், அந்த நிவாரணங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, அஜித் நிவாட் கப்ரால், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் ஃபலீல், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணக்கார, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன், மத்திய வங்கியின் துணை ஆளுநர் தம்மிக நாணயக்கார, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி M.K.சேனாநாயக்க, கே.ஏ.விமலேந்திரராஜா மற்றும் மாணிக்கம் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button
image download