செய்திகள்

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் அங்குரார்ப்பணம்…

மாத்தளை மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களாக கல்வி சேவையாற்றி வரும் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் கடந்த 13/03/2021 ஆம் திகதி இலக்கம் 22, இறத்தோட்டை வீதி, மாத்தளை என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், e-கல்வி தொண்டு நிறுவனத்தின் மலையகத்திற்கான ஒருங்கிணைப்பாளரும், மலையகத்தின் அதியுயர் கல்விமான்களின் ஒருவருமான கலாநிதி. S.K. நவரத்தினராஜா அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் மாத்தளை கல்வி வலய அலுவலகத்தின் பிரதிநிதிகளும், அதிபர்களும், மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு சமூக நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அரச அலுவலர்களும், ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் நேரடியாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு YouTube வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. YOUTUBE வழியாக 110 வரை இணைந்து சிறப்பித்தனர்.

இந்த அலுவலகம் மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தின் நிர்வாக அலுவலகமாகவும், மாத்தளை மாவட்டத்தின் கல்வி வள மத்திய நிலையமாகவும், ஆசிரியர் மற்றும் மாணவர் பயிற்சி நிலையமாகவும், அவுஸ்திரேலியா இ-கல்வி தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டு அலகாகவும் செயற்படும்.

இந்த அலுவலகத்தினை நடாத்தி செல்ல மாத வாடகையை வழங்கி உதவும் E-கல்வி தொண்டு நிறுவனத்திற்கும், தளபாட செலவுகளின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்ட சிருஷ்டி (Sri Shakthi Sumanan Institute) நிறுவனத்திற்கும், நிதி உதவி வழங்கிய ஒன்றிய உறுப்பினர்கள், நலன் விரும்பிகளும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இவ்வலுவலகம் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து அங்குரார்ப்பண நிகழ்வு வரை, அலுவலக பதிவை இலவசமாக மேற்கொண்ட சட்டத்தரணி திருவாளர். மணிவண்ணன் அவர்களுக்கும், மிகவும் குறைந்த செலவில் அலுவலகத்தை வாடகைக்கு வழங்கிய ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆணையாளர் திரு. கொடமுன அவர்களுக்கும், இலவசமாகவே நிகழ்வை ஒளிப்படமாக்கிய புகைப்பட கலைஞர் திரு. துஷி அவர்களுக்கும், தனது முழு உழைப்பையும் உள்ளீடாக்கி ஒரு முழுமையான அலுவலகத்தை குறுகிய காலத்தில் ஒழுங்கமைத்த மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும் எமது ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவின் சார்பான உளமார்ந்த நன்றிகள்.

மாத்தளை மாவட்ட கல்வி நலனுக்கான மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு மாத்தளை மற்றும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பினை எமது ஒன்றியம் எதிர்ப்பார்க்கிறது.

நன்றி,
நிர்வாகக் குழு,
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com