செய்திகள்

மீன்பிடியாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் விடுத்துள்ள கோரிக்கை.!

எரிபொருள் விலையேற்றத்தினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் வெளிப்படுத்தி வருகின்ற கருத்துகள் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோரின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

ஆழ்கடல் பலநாள் கலன்களின் உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்கான வி.எம்.எஸ். எனப்படும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தும் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும், அவுஸ்ரேலியாவினால் வழங்க உறுதியளிக்கப்பட்ட வி.எம்.எஸ் கருவிகள் முன்னுரிமை அடிப்படையில் பொருத்தப்பட வேண்டும் எனவும் ஆழ்கடல் மீன்பிடிக் கலன் உரிமையாளர்களினார் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், அரேபியக் கடலுக்கு தொழில் நடவடிக்கைகளுக்காக செல்லுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள், இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாவும் குறித்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், இந்தியா, சிசல்ஸ், மாலைதீவு, அந்தமான் போன்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி, எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள், எரிபொருள் மானியம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அண்மையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, மண்ணெண்ணை விலையை 35 ரூபாயினால் அதிகரிப்பதற்கு துறைசார் தரப்புக்களினால் விருப்பம் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடற்றொழில் அமைச்சின் வலியுறுத்தல் காரணமாகவே 7 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறெனினும், குறித்த விடயம் தொடர்பான நாடளாவிய கடற்றொழிலாளர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நியாயமான முறையில் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தார்.

அதேபோன்று, ஆழ்கடல் மீனபிடித் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button