விளையாட்டு

அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார் யுபுன் அபேகோன

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிச்சுற்றுப் போட்டியில் களமிறங்கிய இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன ஆறாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

கடந்த சனி மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் 3ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட அவர், 10.32 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 8ஆவது நாளில் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இலங்கையர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிச்சுற்றில் களமிறங்கினார்.

ஏழு சுற்றுக்களைக் கொண்ட தகுதிச்சுற்றில் 3ஆவது சுற்றின் ஐந்தாவது சுவட்டில் யுபுன் அபேகோன் போட்டியிட்டார். தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன், ஆண்களுக்கான 100 மீ்ற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச்சுற்றில் இலகுவாக வெற்றிபெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 8 பேர் பங்குபற்றிய 3ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியை ஆரம்பிப்பதில் சிறிது பின்னடைவை சந்தித்த யுபுன் அபேகோன் போட்டியை 10.23 செக்கன்களில் நிறைவுசெய்து ஆறாவது இடத்தைப் பெற்று பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Related Articles

Back to top button
image download