...
செய்திகள்

முல்லேரியா துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் வெளியாகியது !

முல்லேரியா – தெல்கஹவத்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் எனக் கூறப்படும் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவர் 45 வயதுடைய, உயிரிழந்த நபரின் மைத்துனர் என தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (26) காலை 6.20 அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோரால் நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை முல்லேரியா – தெல்கஹவத்த பகுதிக்கு கொலையாளிகள் இருவரும்  மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

அவர்கள் தமது மோட்டார் சைக்கிளை பிரதேசத்தின் விகாரை ஒன்றுக்கு அருகே நிறுத்தி வைத்து விட்டு குறித்த வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

தங்களை பொலிஸார் என கூறியே அவர்கள் கதவை தட்டியுள்ளனர். பின்னர் வீட்டார் கதவை திறந்த போதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பிலான பிரச்சினை சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் கிடைத்துள்ள சான்றுகள் பிரகாரம் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்ய, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், மிரிஹான விஷேட குற்றத் தடுப்புப் பிரிவு, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 4 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen