ஆன்மீகம்

முல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்

வற்றாத புகழ்மணக்க வன்னியிலே கோயில் கொண்ட எங்கள் தாயே
வாழவைப்பாய் நீயென்று நம்புகின்றோம் நாங்கள்
காலவெள்ளம் அள்ளிவந்த வேதனைகள் கண்டவள் நீ
காலனடி அடைந்தவர்க்கு சாந்தியைத் தந்திடுவாயம்மா

முப்புறமும் கடல்சூழ கோயில் கொண்ட எங்கள் தாயே
எப்பொழுதும் உன்துணையை நாடுகின்றோம் நாங்கள்
அதர்மத்தை அழித்தொழிக்க கிளர்ந்தெழுந்தவளே நீ
ஆதரித்து, அரவணைத்து ஆறுதலைத் தந்திடுவாயம்மா

முல்லைப் பெருநிலத்தில் குடிகொண்ட எங்கள் தாயே
அல்லலற்ற வாழ்வுக்கு உன்துணையை வேண்டுகின்றோம் நாங்கள்
கடல் நீரில் தீப ஒளி பெறுபவள் நீ
கவலையற்ற வாழ்வை தந்திடுவாயம்மா

வளங்கொண்ட வற்றாப்பளையில் நிலைபெற்ற எங்கள் தாயே
வாட்டமில்லா வாழ்வுக்கு உன்னையே நம்புகின்றோம் நாங்கள்
அரசவையில் சிலம்பேந்தி நீதிகேட்டவள் நீ
அதர்மத்தை அகற்றி நலம் தந்திடுவாயம்மா

அற்புதங்கள் பலகொண்டு வீற்றிருக்கும் எங்கள் தாயே
வளமான பெருவாழ்வைத் தருவாயென நம்புகின்றோம் நாங்கள்
கொடுஞ் செயல்கள் தடுக்கவென்று பிறந்தவளே நீ
பொறுமை விட்டு எழுந்து வந்து துணையைத் தந்திடுவாயம்மா

பொங்கலிட்டு தொழுது நிற்போர் துயர் களையும் எங்கள் தாயே
பொங்கி வரும் துயரங்களை துடைத் தெறிவாயென நம்புகின்றோம் நாங்கள்
எங்கள் துயர்யாவையுமே அறிந்தவள் நீ
எதிர்காலம் மேன்மையுற ஏற்றவழி தந்திடுவாயம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button