முல்லைத்தீவு- வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்
வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன்

தமிழ்க் குலத்தின் திருவிளக்காய் தரணியிலே அவதரித்த தாயே
அவனியிலே அவதியின்றி நாம் வாழ அருளளிக்க வேண்டுமம்மா
பாண்டியனின் தவறான தீர்ப்பினால் மதுரை மாநகரையே எரித்தழித்தவளே தாயே
வற்றாப்பளை கோயில் கொண்ட கண்ணகியம்மா சரணம்
நந்திக்கடலருகில் வீற்றருளும் தாயே நடந்த துன்பம் அனைத்தும்
உன் பார்வையில் பட்டதம்மா
கண்முன்னால் இந்நாட்டில் எத்தனையோ மானிடர்கள் வதைபட்டு அழிந்த கதைக்கு நீதியென்று கிடைக்கும் தாயே
வற்றாப்பளை கோயில் கொண்ட கண்ணகியம்மா சரணம்
முல்லைப் பெருநிலத்திலிருந்தருளும் தாயே
ஏனிந்த கொடுமை இனியும் எமக்காகாது அம்மா
உயிர் பறிக்கும் கொடுமனத்தோர் அழிந்தொழிய வேண்டும்
வற்றாப்பளை கோயில் கொண்ட கண்ணகியம்மா சரணம்
கடல் நீரில் தீப ஒளி காணும் தாயே கவலையெல்லாம் அறுத்தெறிந்து
நிம்மதியாய் வாழ வழி தந்திடம்மா நிம்மதியான வாழ்வைச் சிதைப்போரின் கொட்டம் அடக்க வேண்டும்
வற்றாப்பளை கோயில் கொண்ட கண்ணகியம்மா சரணம்
கேட்டவரம் தந்தருளும் தூயவளே தாயே
குவலயத்தில் தமிழர் நிலையுயர வேண்டுமம்மா
நோய் நொடிகள் அண்டாது உடல் வலிமை தருபவளே தாயே
வற்றாப்பளை கோயில் கொண்ட கண்ணகியம்மா சரணம்
நம்பியடி தொழுவோர் துயர்களையும் தாயே
எங்கள் குறை தீர்த்தருள எழுந்துவர வேண்டுமம்மா
நீதி நிலை பெறவும், தீயோரை அடக்கிடவும் வருவாய் தாயே
வற்றாப்பளை கோயில் கொண்ட கண்ணகியம்மா சரணம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.