நுவரெலியாமலையகம்

முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கு எதிரான அமைப்பு மலையகத்தில் உருவானது..

அண்மைக்காலமாக முள்ளுத்தேங்காய் பற்றியதான பேச்சு ஊடகங்களிலும் சரி மக்களிடமும் சரி அதிகமாகவே இருக்க செய்கின்றது.

முள்ளுத்தேங்காய் பயிரிட்டால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் தொடர்பில் ஓரளவு மக்களுக்கு குறிப்பாக மத்திய மாகாண மக்களுக்கு தெரிந்தாலும் அது முழுதாக இல்லை.எனினும் முள்ளுத்தேங்காய் (செம்பனை)பயிரிடுவதற்கான முயற்சிகளை சில பெருந்தோட்ட கம்பனிகள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே களுத்துறை,கேகாலை போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் இந்த முள்ளுதேங்காய் பயிரிடப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா உள்ளிட்ட முழு மலையகத்திலும் இந்த பயிர்செய்கையை விரிவுபடுத்தும் அபாயம் உள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ஒரு முறையான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதனை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அந்ந வகையில் நேற்று (10.06.18)ஹெட்டன் குடாஓயா சர்வோதய நிலையத்தில் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் விசேட ஒன்று கூடல் இடம்பெற்றது.

இந்த ஒன்று கூடலில் அரச சார்பு/சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் உற்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

முள்ளுத்தேங்காய் பயிர்செய்கையால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை சமூகத்தின் சகல மட்டத்தில் உள்ளவர்களுக்கும் தெளிவுப்படுத்துவதுடன், இது தொடர்பில் அக்கறை உள்ள அனைவருடனும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக ( மக்கள் இயக்கமாக) செயற்படவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முள்ளுத்தேங்காய் உற்பத்தியின் மூலம் பல்வேறு சுற்றுப்புறச்சூழல், சமூக பொருளாதார பின் விளைவுகள் ஏற்படுவதுடன் தொழிலாளர் உரிமைகளும் மீறப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை கடந்த வருட இறுதியில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துல ஹென்போல்ட் தோட்டத்தில் இப்பயிர்செய்கையை மேற்கொள்ள எடுத்த முயற்சிகளை மக்கள் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தியதுடன், பாராளுமன்றம் வரை பேசப்பட்டமையானது இங்கு சுட்டிகாட்ட தக்கது.

இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கம்பெனிகளால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை நாம் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்யது கட்டாயமானதாகும்.

அ.ரெ.அருள்செல்வம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button