...
செய்திகள்

முஷாரப் MP பாவித்த வாகனம் RDAக்கு சொந்தமானது

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த WP – PH – 4196 எனும் இலக்கத்தையுடைய வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் சொந்தமானது என விடியல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியிருந்த விவரங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பதிலின் அடிப்படையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குறித்த வாகனத்தை, கடந்த ஒரு வருட காலமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பாவித்து வந்தார்.

இந்த நிலையில், குறித்த வாகனம் பற்றிய தகவல்களைக் கோரி, ஊடகவியலாளர் ஒருவர் – வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விண்ணப்பமொன்றை 29 நவம்பர் 2021 அன்று சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து முஷாரப் பயன்படுத்தி வந்த மேற்படி வாகனம் அவரிடமிருந்து பறிபோனது. இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, மேற்குறிப்பிட்ட இலக்கத்தையுடைய வாகனத்தை, தமக்குக் கீழ்வரும் மகநெகும வீதி நிர்மாண கம்பனிக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வழங்கியதாக, சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்குப் பதிலளித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், சில மாதங்களாக WP – PH – 4196 எனும் இலக்கைத்தைக் கொண்ட ‘டொயோட்டா ஹிலக்ஸ்’ (Toyota Hilux) கறுப்புநிற ‘கெப்’ ரக வாகனமொன்றைப் பயன்படுத்தி வந்த நிலையில், அந்த வாகனம் சில வாரங்களுக்கு முன்னர் அவரிடமிருந்து இல்லாமல் போயுள்ளது.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி பெறப்படும் எந்தவொரு சலுகையினையும், தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அவ்வாறான சலுகைகள் தனக்கு ஹறாம் (விலக்கப்பட்டது) என்றும், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், பொத்துவிலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து – மக்கள் முன்பாக சத்தியம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி :VIDIYAL 

Related Articles

Back to top button


Thubinail image
Screen