கட்டுரை

மெல்ல கொல்லும் நுண் நிதி யார் தவறு? யார் தவறு?

ஜோசப் நயன்

30 வருட காலமாக தலை தூக்கி தாண்டவமாடிய சொல்லிலடங்கா, நினைவலைகளை விட்டு நீங்காத எம்மவர்களின் அவலக்குரலோசை சற்றே ஓய்வெடுக்க, மாண்டவர்கள் போக வாழ்பவர்களின் உயிர் எடுக்க கொடி கட்டி பறக்கின்றது நுண் நிதி எனும் கொடிய அரக்கன். பல வருடகாலமாக இடம் பெற்ற கொடிய யுத்தம் இன்று ஒரு வகையில் மௌனிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் பகுதி அளவில் மட்டும் முன்னேற்றங்கள் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியின், முன்னேற்றத்தின்; வருமானத்தின் நிலை என்ன என்ற கேள்வி எம் ஒவ்வொருவர் மத்தியிலும் உலாவிக்கொண்டிருக்கின்றது.

பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தியிலும் சனத்தொகையிலும் முன்னேற்றம் அடையவேண்டிய பல மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணம் வடமாகணமே. யுத்தம் முடிவடைந்தாலும் எம் பிரதேச மக்களின் அன்றாட வாழ்வுக்கான போராட்டம் முடிவடையவில்லை
அங்கங்களை இழந்த விதவையாக்கப்பட்ட நிர்க்கதி நிலையில் உள்ள அநேகமான குடும்பங்கள் அன்றாட உணவுக்காக அலைமோதி கொண்டிருக்கின்றன. இவ்வாறான குடும்பங்களை மீட்டெடுப்பதற்காக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கோழி வளர்ப்பு மாடு வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் வாழ்வாதார உதவித்திட்டங்கள் என சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அது பாரிய அளவில் எமது மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. என்பது நிதர்சனமான உண்மையாகும் பல குடும்பங்கள் இவ்வாறான திட்டங்களால் கடனாளிகள் ஆன கதைகளும் உண்டு. இது ஒரு புறம் இருக்க இயற்கையும் எம் பொருளாதாரத்தை கடும் வறட்சியினால் பெருமளவில் பாதித்தது. எல்லாவற்றையும் விட நாட்டில் நாட்களை போல தினமும் அதிகரித்து வரும் விலைவாசியும் எமது மக்களை பொருளாதர ரீதியில் மட்டுப்படுத்தியது. இவ்வாறான ஒட்டு மொத்த காரணிகளும் ஒன்று சேர்ந்து எம் வடக்கு கிழக்கு மக்களை குறிப்பாக பெண்களை நுண்நிதி நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

யுத்தத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கு பெண்கள் அன்றாடம் பொருளாதார ரீதியில் தினம் ஒரு யுத்தத்தை எதிர் கொண்டு வருகின்றனர். அரசாங்குமே வெளிநாட்டு அமைப்புக்களே வழங்கும் உதவித்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய விதமாக வழங்கப்படுவதில்லை பயன்படுத்தப்படுவதுமில்லை அதே போன்று ஒட்டுமொத்த சமூகமுமே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வட்டத்துக்குள் தங்கள் நலத்திட்டங்களை நிறுத்தி கொண்டமையினால் வறுமையின் காரணமாக, நோயின்காரணமாக, குடும்ப சுழல் காரணமாக, பொருளாதர ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக பாரிய அளவில் கவனம் செலுத்தப்படவில்லை
இவ்வாறாக கஷ்டத்தின் மத்தியில் வாழக்கையை நடத்திக் கொண்டிருக்கும் குடும்பங்களை நோக்கி படையெடுத்த தென்பகுதியில் உள்ள அநேகமான நுண்நிதி நிறுவனங்கள் பெண்களை சிறிய குழுக்களாக ஒன்று திரட்டி ஆரம்பத்தில் சிறிய தொகை பணத்தை வழங்குவதும் புரியாக மொழியில் ஆவணங்களை வழங்குவதும் அதன் பின்னர் தொடர்ச்சியாக எவ்வித உத்தரவாதமும் பெறப்படாமல் விளக்கங்களும் வழங்காது கடன் பெறுபவர்களிடம் கையெழுத்தை மாத்திரம் மூன்று நான்கு தாள்களில் வாங்கிச் செல்வதும் ஆரம்ப நடவடிக்கையாக காணப்படுகின்றது. ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின் போது தங்கள் நிறுவனங்களை சிறந்த நிறுவனங்களாக காட்டிக்கொள்ள தவறுவதில்லை.

கிழமைக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ பணத்தை மீள பெறச் செல்லும் போதுதான் குறித்த நிதி நிறுவனங்களினதும் அதன் ஊழியர்களின் உண்மைமுகம் தெரிய வருகின்றது.
பணம் கட்டமுடியாத நிலை ஏற்படுகின்ற நேரம் கடனாளிகளை பணத்தை செலுத்த வைப்பதற்காக அவ் நிறுவன ஊழியர்கள் மேற்கோள்ளும் நடடிக்கைகளானது முகம் சுழிக்க வைக்கக் கூடியதாக காணப்படுகின்றது.
கடன் பெற்ற பெண்களை பொது இடங்களில் அவமானப்படுத்தல் அவர்களை பின்தொடர்தல் தகாத வார்த்தைகளில் திட்டுதல் புகைப்படம் எடுத்து அதை பொது வெளியில் வெளியிட்டு அவமானப்படுத்துவதாகக் கூறுவது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கிச் செல்வது எல்லாவற்றிற்கும் மேலாக பாலியல் ரீதியில் துன்புறுத்துதல் என தொடர்கின்றது இவ் நிறுவனங்களின் அட்டகாசம்.

பல பெண்கள் இவ்வாறான ஒட்டு மொத்த இடர்களையும் தாண்டி வெற்றிகரமாக வாழக்கையை நகர்த்தி கொண்டிருந்தாலும் மன அளவில் பலவீனமான பல பெண்கள் பாரதூரமான முடிவுகளை எடுத்து தற்கொலை செய்யும் நிலைக்கும் செல்கின்றனர்.
குடும்ப வறுமை ஒருபக்கம் பெண்களின் சுமைகளை அதிகரிக்க இவ்வாறான கடன்சுமைகளும் வட்டிகளும் இன்னமும் சுமைகளை சுமத்த கடன் செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது நுண்நிதி நிறுவன அதிகாரிகளின் தொல்லை தாங்க முடியாத நிலையில் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்
ஆடம்பர செலவுக்காக நுண்நிதி நிறுவனங்களிடம் பணம் பெறுபவர்களை விட அடிப்படை செலவுக்காக அன்றாட உணவுக்காக நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் பெண்களே அதிகம் தற்கொலை செய்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும்.

ஏது எவ்வாறாக இருப்பினும் ஒட்டு மொத்த தவறுகளையும் நுண்நிதி நிறுவனங்கள் மீதோ அல்லது நுண்நிதி நிறுவன் ஊழியர்கள் மீதோ சுமத்துவது எந்த அளவிற்கு நியாயமான செயல் என்பது தெரியவில்லை நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று அதனை தகுந்த முறையில் பயன்படுத்தி பயனடைந்த பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் எனவே ஒட்டு மொத்தமாக நுண்நிதி நிறுவனங்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு வருவது சிறந்த முடிவாக அமையாது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக போரட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக நடைபெற்கொண்டிருக்கின்றது இவ் சந்தர்பத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் அதிக வட்டிக்கு கடன் தரும் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் எமது கருத்துக்களை போராட்டங்களை மேற்கொள்வது போதுமானதா அல்லது எம்மை தொடர்ந்து கடன் சுமைக்குள் வைத்திருக்கும் அரசாங்கம் மீதும் அதன் அங்கத்தவர்கள் ஆக எம்மிடம் வாக்குகளை பெற்று பல கோடி பெறுமதியான வாகனங்களிலும் சொகுசு வீடுகளிலும் எம்முடைய வரிப்பணத்தில் சுகபோக வாழ்கை நடத்தும் அரசியல் வாதிகள் மீதும் எம் விமர்சனங்களை போராட்ங்களை விரிபடுத்த வேண்டுமா என்பதே

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட்டுவருகின்றன ஆனால் அங்கு எல்லாம் பெரிய அளவில் தற்கொலைகள் பதிவு செய்யப்படவில்லை ஆனால் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரம் இவ்வாறான தற்கொலைகள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? யாருடைய தவறு? மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது நுண்நிதி நிறுவனங்களா , மக்களா அல்லது அரசாங்கமா? குறைக்கப்பட வேண்டியது நுண்நிதி நிறுவனங்களின் எண்ணிக்கையா, கடன் பெறுபவர்களின் தொகையா, வட்டி வீதமா அல்லது தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையையா? பதில் எம்மவர்கள் கைகளில் அரசாங்கம் ஒரு போதும் நுண்நிதி நிறுவனங்களை தடை செய்யப்போவதில்லை. ஏன் என்றால் அரசாங்கம் நுண்நிதி நிறுவனங்களினால் அடையும் இலாபங்கள், பயன்கள் ஏராளம் எனவே அரசாங்கத்தை நம்புவதை விடுத்து எம் சமூகத்தை கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான நடைமுறை சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுப்போமாக! கடன் சுமையற்ற எதிர்கால சந்ததியை உருவாக்குவது எமது தலையாய கடமையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button