விளையாட்டு

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பலமான நிலையில் இங்கிலாந்து!

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட்
போட்டியில் இங்கிலாந்து சவாலான நிலைக்கு முன்னேறியுள்ளது.

ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்தாலும் ஒல்லி போப் மற்றும் ஜொஸ் பட்லர்
ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் இங்கிலாந்தை பலப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்
போட்டி நேற்று மென்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து ,
மேற்கிந்தியதீவுகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

குறிப்பாக இங்கிலாந்து அணி ஒர் ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்து
தடுமாறியது.

இரண்டாவது போட்டியில் சதமடித்து , அனைவரது கவனத்தையும் ஈர்த்த டொம் சிப்லி
ஓட்டமின்றிய நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அணித்தலைவர் ஜோரூட் 17 ஓட்டங்களை பெற்று ஏமாற்றமளித்தார்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள பென் ஸ்டோக்ஸ் 20
ஓட்டங்களை பெற்ற நிலையில் கீமா ரோச்சின் பந்துவீச்சில் போல்டானார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக
துடுப்பெடுத்தாடியிருந்தார்.

அதன்படி இங்கிலாந்து 92 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுக்களையும்
பறிகொடுத்தது.

இந்த சந்தர்ப்பத்தில் மேற்கிந்தியதீவுகள் அணியின் பந்துவீச்சு திறம்பட
அமைந்திருந்தது என்றும் கூறலாம்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோரி பேர்ன்ஸ் 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

எனினும் அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த ஜொஸ் பட்லர் மற்றும் ஒல்லி போப் ஆகியோர்
வீழ்த்தப்படாத ஐந்தாவது விக்கெட்டுக்காக 139 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இந்த 136 ஓட்டங்கள் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களை
கடப்பதற்கு வழிவகுத்தது.

ஒல்லி போப் 91 ஓட்டங்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

இந்த நிலையில் ஒல்லி போப் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதம் விளாசுவார் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிரேஸ்ட வீரரான ஜொஸ் பட்லர் 56 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியின் ஓட்ட
எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுத்தார்.

15 இன்னிங்ஸ்களுக்கு பிறகு டெஸ்ட்போட்டிகளை பொருத்தவரையில்,
இந்த இன்னிங்ஸில் ஜொஸ் பட்லர் அரைச்சதம் விளாசியுள்ளார்.

போதிய வௌ்ிச்சமின்மையின் காரணமாக நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தனர்.

போட்டியின் நிறுத்தப்படும் போது இங்கிலாந்து 04 விக்கெட் இழப்புக்கு 258
ஓட்டங்களை பெற்றிருந்தது.

கீமா ரோச் 02 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ரொஸ்டன் சேஸூக்கு ஒரு விக்கெட் கிடைத்துள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில்
வெற்றியீட்டியுள்ளன.

இந்த நிலையில் இந்தப்போட்டியில் வெற்றியீட்டுகின்ற அணி தொடரை கைப்பற்றும்
நிலைக்கு உயரும்.

Related Articles

Back to top button