யாழ்ப்பாணம்- அனலை புளியந்தீவு- அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்

புனிதமிகு திருவிடத்தில் காட்சி தரும் மாமணியே
புண்ணியங்கள் பெருகிடவே அருள் மழையைப் பொழிந்திடைய்யா
நன்மைகள் மேலோங்கி நலன்கள் எங்கும் பரவிடவே
கருணை செய்வாய் புளியந்தீவு கோயில் கொண்ட நாகேஸ்வரப் பெருமானே
அலைகடல் சூழ் தீவுதனில் வீற்றிருக்கும் மாமணியே
அசையாத மனவலிமை தந்தெம்மை ஆட்சி செய்வாய்
இயல்பான வாழ்வுக்கு இடரின்றி நாம் வாழ
கருணை செய்வாய் புளியந்தீவு கோயில் கொண்ட நாகேஸ்வரப் பெருமானே
நயினை நாகபூசணி அம்மன் திருக்கோயில் அருகு கொண்ட மாமணியே
அம்பாளின் கருணையையும் எமக்காக்கி அருளிடுவாய்
நம்பியுன்னடி பற்றும் நமது நிலை உயர்வு பெற
கருணை செய்வாய் புளியந்தீவு கோயில் கொண்ட நாகேஸ்வரப் பெருமானே
தீவகத்தின் காவலனாய் ஆட்சி செய்யும் மாமணியே
தீராத கவலை பிணியண்டாது தடுத்திடுவாய்
தூயவள வாழ்வு பெற்று நாமென்றும் மேன்மையுற
கருணை செய்வாய் புளியந்தீவு கோயில் கொண்ட நாகேஸ்வரப் பெருமானே
வனப்புமிகு திருக்கோயில் உள்ளுறையும் மாமணியே
வாழ்வுக்கு ஒளியேற்றி மகிழ்ச்சிதர வந்திடுவாய்
இயற்கையன்னை பேரருளால் உலகமே உய்தி பெற
கருணை செய்வாய் புளியந்தீவு கோயில் கொண்ட நாகேஸ்வரப் பெருமானே
சங்கிலியன் ஆண்ட மண்ணில் இருந்தருளும் மாமணியே
சமத்துவத்தை உறுதி செய்ய வழியமைத்து விட்டிடுவாய்
உரிமையுடன் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
கருணை செய்வாய் புளியந்தீவு கோயில் கொண்ட நாகேஸ்வரப் பெருமானே.