செய்திகள்

யாழ்ப்பாணம்- ஊரெழு அருள்மிகு மனோன்மணி அம்பாள் திருக்கோயில்..

மங்கள நாயகி மனோன்மணி நாம் மனம் மகிழ இங்கு கோயில் கொண்டாள்
தங்கத் திருவுரு கொண்ட அன்னை தரணியைக் காக்க மனங்கொண்டு 
நம்மை நாடியே நிலை கொண்டாள்
நம்பிக்கையுடனே அவள் தாள் பணிவோம்.. 
தமிழ் மணங் கமழும் யாழ் மண்ணின்
வளங் கொண்ட ஊரெழு நன்நிலத்தில்
அமர்ந்தருள் செய்யும் பெருமாட்டி
எங்கள் மனோன்மணி அம்பாள் திருவடி வணங்கிடுவோம்.. 
சிந்தையிலிருந்து வழிநடத்தும் சீர்பெறு தாயே எம்மன்னை
பாசத்தின் உறைவிடமாய் விளங்கும் பவித்திரமான திருமகளை
தினமும் துதிப்போம், அருள் பெறுவோம் 
நித்தமும் அவளையே பற்றிடுவோம்.. 
அன்புரு கொண்ட அன்னையவள் ஆறுதல் அளிக்கவே தோன்றிவிட்டாள்
துன்பம் இனியெமக்கில்லை யென்று துணிவுடன் முன்னே சென்றிடுவோம்
வளங்கள் நிறைந்த வாழ்வுமுண்டு வாழ்ந்திட நல்ல வழியுமுண்டு
அன்னை மனோன்மணி அருளிடுவாள் நம்பிக்கையுடனே வாழ்ந்திடுவோம்.. 
பர்வத பர்த்தினி என்ற பெயரையும் உடையவள் எம் அன்னை 
பாசம் பொங்க அணைத்திடுவாள் 
தமிழ்க் குலம் தளைக்க வகை செய்வாள்
தாயவள் திருவருள் பெற்று உய்திடுவோம்.. 
வளங்கள் பெருக்கியெமை வாழவைப்பாள்
பாரினில் நேர்மையும், ஒழுக்கமும் உறுதி பெற்றிடவே
அரும் பெரும் சாதனை ஆற்றிடுவாள்- அன்னை 
அவள் திருநாமத்தைப் போற்றிடுவோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
image download