...
செய்திகள்

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை சுருவில் அருள்மிகு ஐயனார் திருக்கோயில் ..

காவலூரின் காவலனே ஐயனார் பெருமானே
காவல் செய்து வாழவைக்கும் உன்னருளைப் போற்றுகின்றோம்
பாவம் செய்யும் நிலையகற்றி எம்மை மீட்டு
பக்குவமாய் வாழ வழியமைத்துத் தருவாய் ஐயனாரே
சிவனாரின் அம்சமாக வீற்றருளும் திருவருளே
சிந்தனையில் தெளிவு பெற்று சீர்பெறவே வாழ வழி தேடுகின்றோம்
சுயநலமும், கொடுமனமும் அற்றவராய் நாம் வாழ்ந்திடவே
அருளளித்து, அபயம் தந்து அரவணைப்பாய் ஐயனாரே
யாழ்ப்பாணப் பெருநிலத்திற்குரித்துடைய பேரருளே
வாழ்த்தி வழிகாட்டி எம்மை வழிநடத்த வேண்டுகின்றோம் 
பொய், களவு, காமம், கொலை, சூது அற்ற நிலை அடைந்து வளம் பெற்றிடவே
அருள் பொழிந்து நெறிப்படுத்தி ஆட்கொள்வாய் ஐயனாரே
தீவகத்தின் சுருவிலிலே கோயில் கொண்ட திருமகனே
உற்றவரும், ஊரவரும் இணைந்துயர உன்னைத் துணைகோருகின்றோம்
கிட்டவரும் தீவினைகள் எமையண்டாதிருந்திடவே
ஏற்றதுணையாயிருந்து காத்தருள்வாய் ஐயனாரே
நம்பிவந்து அடிபணிவோர் நலங்காக்கும் தலைமகனே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள இறைஞ்சுகின்றோம்
அச்சம் அகற்றி மன நிறைவைத் தந்திடவே
உற்ற துணையிருந்து ஆறுதலைத் தந்திடுவாய் ஐயனாரே 
தமிழ் வளர்த்த திருநிலத்தில் குடிகொண்ட பெருமானே
தளர்வில்லா வாழ்க்கை நிலை எமக்கருளக் கோருகின்றோம்
வளங்கொண்டு மகிழ்வுடனே முன்னேற்றம் கண்டிடவே
மனவுறுதி தந்தெம்மை வாழ்த்தி துணைவருவாய் ஐயனாரே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen