ஆன்மீகம்

யாழ்ப்பாணம்- கோப்பாய்- அருள்மிகு- சக்கரத்தாழ்வார் திருக்கோயில்

கோப்பாய்-சக்கரத்தாழ்வார் திருக்கோயில்

கோப்பாய் நற்பதியில் கோயில் கொண்ட மாதவனே
கேட்டவரம் தந்தெம்மை காத்தருளும் பெருமாளே
மகிழ்ச்சி நிறை வாழ்வுக்கு வழியமைத்துத் தருவோனே
தொழுது நிற்கும் உன்னடியார் உள்ளமதில் எழுந்தருள்வாய்

வளங்கொண்ட தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் மாதவனே
வழிகாட்டி நெறிப்படுத்தி வளமளிக்கும் பெருமாளே
துணையிருந்து ஆறுதலை என்றுமே தருவோனே
தொழுது நிற்கும் உன்னடியார் உள்ளமதில் எழுந்தருள்வாய்

அழகுமிகு திருக்கோயில் கொண்டவனே மாதவனே
அச்சமின்றி நாம் வாழ வழியமைக்கும் பெருமாளே
அரவணைத்து ஆற்றல் தந்து ஆசியையும் தருவோனே
தொழுது நிற்கும் உன்னடியார் உள்ளமதில் எழுந்தருள்வாய்

அன்னை மகாலட்சுமியை அருகு கொண்ட மாதவனே
அருகிருந்து நன்மை செய்து அருளளிக்கும் பெருமாளே
பெருகிவரும் நன்மைகளை எமக்காக்கித் தருவோனே
தொழுது நிற்கும் உன்னடியார் உள்ளமதில் எழுந்தருள்வாய்

நம்பி வரும் அன்பர்களின் நலன் காக்கும் மாதவனே
நம்பிக்கை தந்தெம்மை வாழவைக்கும் பெருமாளே
அமைதி நிறை வாழ்வுக்கு அடியமைத்துத் தருவோனே
தொழுது நிற்கும் உன்னடியார் உள்ளமதில் எழுந்தருள்வாய்

சக்கரத்தாழ்வார் என்ற பெயர் பூண்ட மாதவனே
சங்கடங்கள் வராது தடுத்தருளும் பெருமாளே
மருண்டு நிற்கும் நிலையகற்றி மனவுறுதி தருவோனே
தொழுது நிற்கும் உன்னடியார் உள்ளமதில் எழுந்தருள்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button