...
செய்திகள்

யாழ்ப்பாணம் தில்லைவெளி- அருள்மிகு பிடாரி அம்மன் திருக்கோயில் 

யாழ்ப்பாணம்- நயினாதீவு- தில்லைவெளி- அருள்மிகு பிடாரி அம்மன் திருக்கோயில் 
அலைகடலின் அருகிருந்து காவல் செய்யும் அம்மா
நிலைகுலையா வாழ்விற்குத் துணையிருக்க வேண்டும் 
தமிழ் முழங்கும் திருவிடத்தில் கோயில் கொண்ட தாயே
தரணியிலே நம் வாழ்வுரிமை காத்தருள வேண்டும் 
நயினாதீவினிலே கோயில் கொண்டு காவல் செய்யும் அம்மா 
நம்பியுந்தனடி பணிவோர் நலன் காக்க வேண்டும் 
கடல் சூழ்ந்த தீவினிலே வீற்றிருக்கும் தாயே
கவலையின்றி வாழும் நிலை எமக்கருள வேண்டும் 
தில்லைவெளிக் கடற்கரையில் காவல் செய்யும் அம்மா 
திறமையுடன் முன்னேற வழியமைக்க வேண்டும் 
வடஇலங்கைத் தீவகத்தில் அருள் பொழியும் தாயே
வலிந்து வரும் துன்பங்களைத் துடைத்தெறிய வேண்டும் 
நயினை அம்மன் திருக்கோயில் அருகமர்ந்த அம்மா 
நிலையான நிம்மதியை எமக்களிக்க வேண்டும் 
பலம் கொண்டு, வளம் கொண்டு வாழவேண்டும் தாயே
பரிதவிக்கும் நிலையின்றி வாழவழி வேண்டும் 
பெரும் படையல் தனையேற்று அருள் வழங்கும் அம்மா 
பெருமை குன்றா எம்வாழ்வு நிலைத்திடவே வேண்டும் 
காவல் தெய்வம் பிடாரி என்ற பெயர் கொண்ட தாயே 
குறையில்லா நிறைவாழ்வை எமக்கருள வேண்டும் 
தன்மானம் உறுதிபெற உணர்வளிக்கும் அம்மா 
தயக்கமின்றி முன்செல்ல உறுதி தரவேண்டும் 
கேட்ட வரம் தந்தருளும் தில்லைவெளித் தாயே
உரிமையுடன் வாழும் வழி எமக்கருள வேண்டும். 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen