ஆன்மீகம்

யாழ்ப்பாணம் – நல்லூர் – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்.

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் நல்லூர் – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

நல்லூர்ப் பதியமர்ந்த நாயகனே
நல்லோர் மனங்குளிர அருள் தருவாய்
பொல்லா வினைகளை அறுத்தெறிந்து
பொன்னான வாழ்வை நீ தந்திடுவாய்

குறமகள் வள்ளியை மணந்தவனே
குற்றங்கள் பொறுத்து நம் குறை தீர்ப்பாய்
வள்ளலே உன் பெருங் கருணையினால்
வளமான பெருவாழ்வை அருளிடுவாய்

மயிலேறி அறங்காக்க வருவோனே
மாசில்லா வாழ்வுக்குத் துணை வருவாய்
பாரினிலே உன்னருளைப் பரப்பிவிட்டு
பாவங்கள் எல்லாமே தொலைத்திடுவாய்

வேல்தாங்கி அருளிட வருவோனே
வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய்
அருளுடனே ஆட்சியை நீ நிறுவிவிட்டு
ஆணவங்கள் யாவையுமே அழித்திடுவாய்

தமிழ் காக்க முன்னின்று வருவோனே
தரணியிலே தமிழ் முழங்கச் செய்திடுவாய்
நெஞ்சமெல்லாம் நிம்மதியை நிறைத்து விட்டு
நிம்மதியை நிரந்தரமாய் நிரப்பிடுவாய்

துள்ளுதமிழ் கேட்டிட மகிழ்வோனே
துன்பநிலை அகற்றிட வந்திடுவாய்
நம்பியே உன்னடி சரணடைந்தோம்
நல்லூர்க் கந்தனே உடனிருப்பாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button