செய்திகள்

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு அருள்மிகு ஆலமாவன சித்திவிநாயகர் திருக்கோயில் 

கடல் சூழ்ந்த பெருந்தீவில் கோயில் கொண்ட விநாயகரே
காலத்தால் நிலை பெற்ற வரலாற்றைக் கொண்டவரே
அலைகடலின் ஓசையுடன் அமர்ந்தருளும் நாயகனே
அன்பு கொண்டு, ஆற்றல் தந்து வழிநடத்த வேண்டுமய்யா
ஆலமர தோப்பு சூழ அமர்ந்திட்ட விநாயகரே
ஆறுதலைத் தந்தெம்மை ஆட்சி செய்ய வந்தவரே
வெடியரசன், வீகாமன் ஆண்ட பெருந்தீவில்
வீற்றிருந்து நமக்கு நலம் நல்கிடவே வேண்டுமய்யா
ஆதிரையில் வீதிவலம் வந்தருளும் விநாயகரே
தந்தை தாய் பெரியரென்று தரணிக்குச் சொன்னவரே
தறிகெட்டு நிலைமறந்த மக்களை நீ திருத்திடவே 
மனங்கொண்டு வழிசெய்ய உன்னருளே வேண்டுமய்யா
தீவுகளில் பெருந்தீவாம் நெடுந்தீவில் வீற்றிருக்கும் விநாயகரே
தீயபகை, கொடுமைகளைத் தடுத்து வரம் அருள்பவரே
நம்தமிழர் வரலாறு என்றென்றும் உயர்வுபெற
நற்றுணையாயிருந் தெமக்கு காப்பளிக்க வேண்டுமய்யா
தொல்லை தரும் கொடுவினைகள் அகற்றிவிடும் விநாயகரே
நிம்மதியே நிலைத்துவிட வழிகாட்டி நிற்பவரே
அறிவுடனே ஆற்றல் பெற்று நல்லவழி நாமடைய
துணையிருந்து வளம் பெறவே வழிசெய்ய வேண்டுமய்யா
நம்பிக்கை நமக்கருளும் ஐங்கரனே விநாயகரே
நம்பித்தொழும் பக்தர்களுக்காறுதலை அளிப்பவரே
எம் குறைகள் போக்கியெமக் காறுதலை வழங்கிவிட
என்றும் எம்மிதயம் இருந்திடவே வேண்டுமய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Sent from my Huawei phone

Related Articles

Back to top button