...
செய்திகள்

யாழ்ப்பாணம்- புலோலி- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் 

உலகின் மையப்புள்ளியைக் காலடியில் வைத்து
தில்லையிலே திருநடனம் புரியும் சிவனே 
எல்லையில்லாவுன் கருணை உலகினையே
காக்க வேண்டும் புலோலியுறை பசுபதீஸ்வரப் பெருமானே 
வட இலங்கை பருத்தித்துறை முனையிலே 
அன்னை பர்வதவர்த்தினியுடன் கோயில் கொண்ட சிவனே 
வளந்தந்து, வாழ்வில் நலந்தந்து எங்களை
அணைத்தருள வேண்டும் புலோலியுறை பசுபதீஸ்வரப் பெருமானே 
கங்கையம்மன் முடிகொண்டு தரணியெங்கும் 
குளிர்வித்து நலம் பொழியும் சிவனே 
நோய் நொடிகள் இல்லாத நிம்மதியைத் தந்தெம்மை
அரவணைத்து அருள் தந்து காத்திட வேண்டும் புலோலியுறை பசுபதீஸ்வரப் பெருமானே 
நாடிவந்துன் பாதம் பற்றுகின்றோம் நாங்கள் 
நல்லருளைத் தந்தெம்மை ஆதரித்து அரவணைத்தருள்வாய் சிவனே 
தொல்லையில்லா அமைதி நிறை வாழ்வை நல்கியெம்மை 
என்றும் ஆதரிக்க வேண்டும் புலோலியுறை பசுபதீஸ்வரப் பெருமானே 
தமிழ் முழங்கும் பருத்தித்துறை நகரருகே இருந்துறையும் சிவனே 
தரணியிலே அச்சமில்லா நிலை நிறுவி
வலிந்து வரும் துன்பங்களைத் துடைத்தெறிந்து
காத்து கருணை செய்ய வேண்டும் புலோலியுறை பசுபதீஸ்வரப் பெருமானே 
நல்மனது கொண்டவர்கள் வாழ்வில் வளம் பெருகி நிறைவுபெற 
என்றும் உடனிருந்து அருள் வழங்கும் சிவனே 
நேர்மையும், ஒழுக்கமும் நிறைந்த நற்பண்புகள் 
எங்கும் நிறைந்து விட வேண்டும் புலோலியுறை பசுபதீஸ்வரப் பெருமானே. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen