...
செய்திகள்

யாழ்ப்பாணம்- மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் ..

அழகன் திருமுருகன் அருள் பொழியும் இளமுகத்தோன்
அணைத்தெம்மைக் காத்திடவே என்றுமே உடனிருப்பான்
கேட்டவரம் உவந்தளித்து உயர்வளிக்கும் திருக்குமரன்
துன்பங்களைப் போக்கியெமக்கின்ப நிலை தான் தருவான்
மாவிட்டபுரந்தனிலே கோயில் கொண்ட இளமுருகன்
வாட்டமில்லா மேன்மை நிலை நமக்களிக்க வந்திடுவான்
தொய்வின்றி நாம்வாழ வழியமைக்கும் ஆறுமுகன்
துயரங்கள் அண்டாமல் காத்து நம்மை வாழவைப்பான்
தமிழரசர் ஆண்ட தமிழ் மண்ணில் இருந்தருளும் சிவன் மகனார்
தரணியிலே தமிழ் முழங்க ஏற்ற வழி செய்திடுவான்
சூரனின் கொட்டத்தை அடக்கியருள் செய்த வேலோன்
சூழவரும் கொடுமைகளைத் துடைத் தெறிந்து நமைக்காப்பான்
வேதனைகள் களைந்தெமக்கு நலமளிக்கும் கந்தன்
வெற்றியுடன் நாம்வாழ வழியமைத்துத் தந்திடுவான்
நம்பித்தொழும் அடியவர்க்கு நலமளிக்கும் கடம்பனவன்
நட்டாற்றில் எங்களைக் கைவிடவே மாட்டான்
வள்ளி, தெய்வானையரை உடன் கொண்ட கார்த்திகேயன்
வாழ நல்ல வழிகாட்டி உயர்த்திடவே வந்திடுவான்
தமிழ்த் தெய்வம் என்ற பெருமை பெற்ற திருமுருகன் 
தயங்காது தமிழ் மொழியை உலகாளச் செய்திடுவான்
ஆற்றல் தந்து, அரவணைத்து, ஆறுதலைத் தரும் கந்தன்
திமிர் பிடித்தோர் தொல்லைகளை வேரறுத்தே விட்டிடுவான்
நம்பியவன் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள் 
திடமான எதிர்காலம் நமக்களிப்பான் திருக்குமரன்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen