செய்திகள்

யாழ்ப்பாணம்- வண்ணை- அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில்

யாழ்ப்பாண மாநகரில் இருந்தருளும் தாயே
நாம் வாழ உரியவழி காட்டிடுவாய் நீயே
நேர்மையுடன் நம் வாழ்வு அமைய வேண்டும் தாயே
நேர்வழியைக் காட்டியெம்மை வழிநடத்து நீயே

யாழ்ப்பாண தமிழரசின் அரண் நீயே தாயே
உரிமை கொண்டு நாம் வாழ துணைவருவாய் நீயே
தமிழினமும், நம் மொழியும் தலை நிமிரத் தாயே
தரணியிலே உடனிருந்து பலம் தருவாய் நீயே

வாழ நல்ல வழியமைத்து காப்பளிக்கும் தாயே
வாழ்வுக்கு ஒளிதந்து உணர்வளிப்பாய் நீயே
வளம் சூழ்ந்த தமிழ் மண்ணில் இருந்தருளும் தாயே
மனதினிலே வலிமை தந்து காப்பளிப்பாய் நீயே

வரம் தந்து வாழ்வு தந்து அரவணைக்கும் தாயே
வலிந்து வரும் துன்பங்களைத் துடைத்தெறிவாய் நீயே
சங்கிலியன் ஆண்ட தமிழ் மண்ணில் கோயில் கொண்ட தாயே
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழவைப்பாய் நீயே

துன்பங்கள் அகற்றியெமக்கருள் நல்கும் தாயே
தீய பகை, கொடுமைகளை அகற்றிடுவாய் நீயே
நம்பியுன்னடி தொழுகின்றோம் தாயே
நம்பிக்கை தந்தெம்மை ஆட்சி செய்வாய் நீயே

வீரமாகாளியம்மா என்றழைக்க விரைந்து வரும் தாயே
வெற்றியுடன் நாம் வாழ அருள் தருவாய் நீயே
தயங்காது முன்செல்ல துணை வேண்டும் தாயே
தந்ததனை உறுதி செய்ய உடன் வருவாய் நீயே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen